உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          வெருவுறு பிணையின் விம்முவனள் நடுங்கும்
          அஞ்சில் ஓதியை அஞ்சல் ஓம்பென
          நெஞ்சுவலிப் புறுத்து நீக்குவனன் நிறீஇ
    145    இலக்கவண்ஐ கொளீஇ வில்லின் வாங்கி
          ஓரோர் கணையின் உராஅய் வந்தவர்
          ஏழேழ் மறவரை வீழ நூறலின்
          ஆழு நெஞ்சமொ டச்சம் எய்திப்
          பட்டவர் தந்தமர் பகையின் நெருங்கிக்
    150    கட்டெரி கொளீஇக் கரந்தனர் எனலும்
 
        142 - 150; வெருவுறு.......கரந்தனரெனலும்
 
(பொழிப்புரை)  அங்ஙனம் ஆர்த்த அளவிலே நம் மன்னவன் அச்சத்தாலே நடுங்கும் வாசவதத்தையை ' யான் இவரைக் கொன்றொழிப்பேன்! நீ அஞ்சற்க ! ' என்று தேற்றி ஆங்கொரு சார் அம்மகளிரைச் சிறிது அகல நிற்கச் செய்து அவ்விடத்தே அவ்வேடரை இலக்காகக் கொண்டு தனது வில்லின்கண் வைத்து வளைத்தேவிய ஓர் அம்பினாலே ஏழேழு வேடர் படிந்து வீழும் படி கொல்லுதலாலே துன்பத்திலே அழுந்தும்  நெஞ்சத்தோடே அச்சமும் அடைந்து இறந்தவர் ஒழிய எஞ்சிய வேடர் பகைமை யான் நெருக்கி அக்காட்டின்கண் அவரைச் சூழத் தீக் கொளுவி ஓடி மறைந்தனர் என்று (இடபகன்) கூறி வருமளவிலே என்க.
 
(விளக்கம்) 142-143 : புலி முதலியவற்றைக் கண்டு அச்சமுறு கின்ற பிணை மான்போல நெஞ்சம் விம்மி நடுங்காநின்ற அழகிய சிலவாகிய கூந்தலையுடைய வாசவதத்தையை என்க. அஞ்சல் ஓம்பு - அஞ்சுதலைப் பரிகரி ; அஞ்சற்க,
    145. நீக்கி நிறுத்தி என்க. தலைமைபற்றி ஓதியை மட்டும். கூறினர். ஓதியையும் இனம் பற்றி ஏனைக் காஞ்சன மாலையையும் என்க. நீக்குவன்;முற்றெச்சம். நிறீஇ-நிறுத்தி.   
    146, இலக்கவணை-ஐ அவண் இலக்குக் கொளீஇ,-எனக் கண்ணழித்து மாறிக் கூட்டுக. ஐ-தலைவன்.; உதயணன், விலக்கவண் என்றும் பாடம், ஒருகணைக்கு ஏழுவேடர் விழும்படி கொன்றென்க. ஏழென்றது பல என்னும் பொருட்டு. நூறுதல்- கொல்லுதல்.
    148. துன்பத்திலே அழுந்தும் நெஞ்சத்தோடென்க, பட்டவர் ஒழிய எஞ்சிய அவர் தமர் என்க. பகையாலே அணுகி என்க
    150. கட்டெரி வளைக்கும்
  நெருப்பு. எனவே நான்கு திசையினும் என்பதாம். என்று இடபகன் கூறிய அளவிலே என்க.