உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          குறிவயிற் குறித்தியாஞ் செல்லு மாத்திரை
          அறிவின் நாடி அரும்பொருள் உண்டென
          விரைமுதல் கட்டிய விரும்பின் இமிழ்ப்பின்
          உரைமுதல் காட்டி உளமை கூறி
    175    நின்ற பொழுதிற் சென்றியாந் தலைப்பெய
          எந்திறம் அறியா ஏதிலன் போல
          வெந்திறல் வேந்தனும் அவரொடு விராஅய்
          ஓடல் ஆற்றான் ஆகி ஒருசிறை
          ஆடமைத் தோளியோ டகன்றனன் நிற்ப
 
        170 - 179 ; பெயர்ந்து....,.அகன்றனனிற்ப
 
(பொழிப்புரை)   யாம் உதயணனிருந்ந இடத்தில் அவனைச் சேர்தலைக் கருதி எம்படையோடு பெயர்ந்து செல்லுமளவில் அவ்வேடர் தலைவன் உதயணனுடைய கைகளைக் கட்டாநிற்ப அவனும் தன் அறிவாலே ஆராய்ந்து 'நீயிர் பொருளை விரும் பினால் அரும் பொருள் எம்பால் உண்டு. என்றும் எம்பால்  முதலாகவுள்ள அப்பொருள் முடிப்பின்கண் பொதிந்து புதைக்கப் பட்டிருக்கிறது. அதனைக் காட்டுவல்' என்றும் உரையாலே  தன் பால் பொருள் உண்மையைக் காட்டி நின்றானாக; அப்பொழுது யாங்களும் அவ்விடத்தை எய்தினேமாக எம்மை அறியாத அய லான் போல நம் வேந்தனும் அவரோடு சேர்ந்து ஓடத்தொடங்கி ஓடவியலா தான் போன்று, வாசவதத்தையோடு  ஒருசார் ஒதுங்கி நிற்ப என்க.
 
(விளக்கம்) 171. குறி-உதயணன் இருத்தற்குக் குறிப்பிட்ட இடம். யாமென்றது, இடபகன் தன் படைஞரை உளப்படுத்திக் கூறியது.
    172 - 175. விரைமுதல் : வினைத்தொகை, விரைகின்ற முதல்வன் என்க. முதல்; ஆகுபெயர்; தலைவன்; வேடர் தலைவன். கட்டிய ; செய்யிய என்னும் வினையெச்சம். இதனைச் செயவெ னெச்சமாக்குக,
    முதல் கட்ட (உதயணன்) அறிவினாடி நீயிர் (பொருளை) விரும்பின் (எம்பால்) அரும் பொருள் உண்டு என உரை (யால்) தம்மால்  இமிழ்ப்பின் முதல் உளமை காட்டிக் கூறி நின்ற பொழுதில் என கூட்டிச் சில சொற் பெய்து முடித்துக் கொள்க,
    172. அவர்பால் தப்புதற்குரிய வழியைத் தன்றிவாலே ஆராய்ந்து என்க,
    173. இமிழ்ப்பு- முடிச்சு.
    174. உளமை-உளதாந்தன்மை,
    175. தலைப்பெய - கூடாநிற்ப.
    177. வேந்தன் ; உதயணன், விராஅய் -கலந்து,
    178.ஓடத்தொடங்கி ஓட ஆற்றாதான் போல என்க. ஒருசிறை - ஒருபக்கத்தே.
    179.அசைகின்ற மூங்கிலை ஒத்த தோளையுடைய வாசவதத்தையோடேஎன்க, அகன்றனன் : முற்றெச்சம்.