உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
         
    180    வேட்டுவர் அகலக் கூட்டம் எய்திக்
          கரும நுனித்த கடுங்கண் ஆண்மை
          உருமண் ணுவாவின் ஊரகம் புகீஇப்
          போகப் பெருநுகம் பூட்டிய காலை
          மாக விசும்பின் மதியமும் ஞாயிறும்
    185    எழுதலும் படுதலும் அறியா இன்பமொ(டு)
          ஒழுகுபுனல் அகழினை உடையெனக் கிடந்த
          முழுமதில் நெடுங்கடை முதற்பெரு நகரம்
          தாரணி யானை பரப்பித் தலைநின்(று)
          ஆருணி அரசன் ஆள்வதும் அறியான்
 
        180-189 ; வேட்டுவர்......அறியான்
 
(பொழிப்புரை)   இங்ஙனம் அவ்வேட்டுவர் எம்மைக்கண்டு அஞ்சி அகலா நிற்பப் பின்னர், யாங்கள் ஒருங்கே கூடிச் சயந்தி நகரத்தின்கட் புகுந்து, உதயண குமரனுக்கு வாசவதத் தையை மணம் செய்வித்துக் கட்டிலேற்றிய காலந் தொடங்கி, வானத்திலே ஞாயிறெழுதலும், திங்கள் எழுதலும், அவைமறை தலும், அறியமாட்ட.ாமைக்குக் காரணமான இன்பத்திலே அழுந் தித் தனது தலைநகரத்தைக் கைப்பற்றி, ஆருணி அரசன் ஆட்சி செய்தலைத் தானும் கருதாதவனாய், என்க,
 
(விளக்கம்) 180. கூட்டம் எய்தி-கூடி.
    181, அரசகாரியங் களை நுண்ணிதாக ஆராய்ந்து கற்றவனும், போரின்கண் தறுகண்மையுடைய மறத்தன்மையுடையவனுமாகிய உருமண்ணுவா என்க. ஊர் - சயந்தி நகரம்,                    
    183. போகப் பெருநுகம்-நுகர்ச்சியாகிய பெரிய பாரம். போகப் பெருநுகம் என்றது திருமணத்தை.
    184. மாகவிசும்பு : பண்புத்தொகை,
    மதியமும் ஞாயிறும் எழுதலும் படுதலும் அறியாமைக்குக் காரணமான இன்பம் எய்தி என்க. அவ்வின்பத்தை அல்லது உலகின்கண் நிகழுவனவற்றை ஒருசிறிதும் உணராதபடி அதன் கண் அழுந்திக் கிடக்கின்றான் என்பது கருத்து.
    186.இயங்கும் நீரையுடைய அகழியை உடைபோல உடுத்துக் கிடந்த முழுமதியையும் நெடிய தலைவாயிலையும் உடைய தலை நகரமாகிய  பெரிய கோசம்பி நகரத்தை என்க.
    188.தாரணி-தூசிப்படை.மாலையணிந்த யானை எனக்கூட்டினுமாம். தலைநின்று - அரனாக இருந்து.