உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          அகலா தோரையும் அகல்கென நீக்கி
          உம்மைப் பிறப்பிற் கொண்டுஞ் செம்மற்குத்
    215    தாயோ ரன்ன தகையினிர் ஆதலின்
          மேயோர்க் கல்லது மெய்ப்பொருள் உணர்த்தல்
          ஏதில் பெரும்பொருள் நீதியுள் இன்மையின்
          தெரியக் கேட்கென விரியக் காட்டி
 
        213 - 218 ; அகலாதோரையும்.,....காட்டி
 
(பொழிப்புரை)   தன்னைவிட்டு அகலாத இயம்பினைவுடைய வரையும் அவ்விடத்து நின்றும் அகலச் செய்து பின்னர் அச்சாங்கியத்தாயை நோக்கி ''அன்னையே'' அரசியலுக் குரிய பொருள் நூலின்கண்,அன்பினாலே பொருந்திய வர்க்கு மெய்ப் பொருளைக் கூறுவதல்லது, அல்லாதார்க்கும் கூறுதல் கூடும் என்பது   காணப்படுவதொன்றன்று. நீயிரோ! நம் செம்மலுக்குத் தொன்றுதொட்டுப் பற்பல பிறப்பினும் அடிப்பட்டுவரும் உழுவலன்புடையீர்,ஆதலின் என் உள்ளக் கிடையை நுமக்குக்  கூறத்துணிந்தேன் விழிப்புடன் கேட்பீராக!' என்று விரிவாக எடுத்துக்காட்டி என்க.
 
(விளக்கம்) 214  உம்மைப் பிறப்பிற் கொண்டு -பழம் பிறப்புக்களிலே தொடங்கி மேற்கொண்டென்க. பிறப்பு; சாதி யொருமை தொன்றுதொட்டுப் பிறவி தோறும் தொடர்ந்து வரும் உழுவலன்புடையீர் என்பது கருத்து. செம்மல்; உதயணன்,
    215.தாயோரன்ன தகையினிர் -தாயன்பு போன்ற அன்புத் தகுதி யையுடையீர்;தகை-தகுதி, தகையினிர்; முன்னிலைப் பன்மை வினைமுற்று,
    216. மேயோர்- அன்பாலே பொருந்தியவர். மெய்ப் பொருள் -உண்மைப் பொருள்.
    217. ஏதில் - குற்றமற்ற. பொருள் நீதி-பொருள் பற்றிய நீதிகளைக் கூறும் நூல்.