உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
           அற்றங் காத்தலின் ஆண்மை போலவும்
    220    குற்றங் காத்தலிற் குரவர் போலவும்
          ஒன்றி ஒழுகலின் உயிரே போலவும்
          நன்றி யன்றிக் கன்றியது கடிதற்குத்
          தகவில செய்தலிற் பகைவர் போலவும்
          இனையன பிறவும் இனியோர்க் கியன்ற
    225    படுகடன்   
 
        219 - 225; அற்றம்......படுகடன்
 
(பொழிப்புரை)   ஒருவனுக்கு நண்பர் ஆயினோர் அவனுக்குச் சோர்வு வாராமற் காத்தலிலே அவனது வீரம்போலவும், குற்றம் வாராமற் காத்தலிலே அவனது ஐம்பெருங் குரவர் போலவும், கூடி ஒழுகுதலிலே அவனது உயிர் போலவும், மிகுதிக்கண் மேற்சென்றிடித்துத் தகவில்லாத செயலைச் செய்தலிலே அவன் பகைவர் போலவும் இருந்து இன்னோ ரன்ன பிறவும் செயதல் அவர் தம் கடமையாகும், என்றான் என்க.
 
(விளக்கம்) 219, அற்றம்-சோர்வு; ஈண்டு உவகை  மகிழ்ச்சி யாலே உண்டாகும் சோர்வென்க, ஆண்மை - மறத்தன்மை.
    220. குற்றம் - கழிகாம முதலி்யவற்றால் உண்டாகும் பழி. குரவர் - அரசன் உவாத்தியாயன் தந்தை தாய் தம்முன் என்னு மிவ்வைவரும் என்க.
    221. ஒன்றி - பொருந்தி. அவனுடலில் ஒன்றி வாழும் அவன் உயிர் போல என்க.
    222. நன்றியின் கண்ணன்றித் தீமையின்கண் மிக்குச் சென்றொழு கும், ஒழுக்கத்தினை நீக்குதற் பொருட்டுத் தகவில்லாத செயல்களைச் செய்தலிலே என்க, தகவில -தகுதியில்லாத செயல் என்றது, துன்புறுத் தும் செயலை,
    223. இனியோர்க்கு இயன்ற படுகடன்- நண்பர்க்குரிய கடமை.