உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          தொடுகழற் குருசில் வடுவுரை நிற்ப
          இன்ப அளற்றுள் இறங்கினன் ஆதலின்
          துன்பந் துடைத்த தொழிலே போல
          அவலம் ஒழிப்பி அவன்வயிற் றிசையா
    230   இகலடு பேரரண் இலாவா ணத்தவன்
          உகந்துண் டாடி மகிழ்ந்தபின் ஒருநாள்
          வாலிழை மாதரை மன்னவன் அகல்விடைக்
          கோலக் கோயில் கூரெரிக் கொளீஇப்
          பொய்ந்நில மருங்கிற் போத்தந் தென்வயின்
    235   கண்ணெனத் தருதல் கடனெனக்கூறி
 
        225 - 235 ; தொடுகழல்,,,,,கூறி
 
(பொழிப்புரை)   நங்குருசில் முன்னர் நிகழ்ந்ததனைச் சிறிதுங் கருதாதவனாய்த் தன்பாற் பழிச்சொல் நிலை பெறாநிற்பவே இன்பச் சேற்றில் இறங்கி அழுந்திக்கிடக்கின்றான் ஆதலாலே
    (229) அவன்பால் வைத்த அன்பாலே நீயிர் மயங்காமல், முன்பு முயன்று அவனது சிறைத்துன்பம் முதலியவற்றைப் போக்கினாற் போலவே, இப்பொழுதும் அவனது (உவகை மகிழ்ச்சி யிற் சோர்வாகிய) அவலத்தை ஒழித்து அவன் சயந்தியினின்றும் இலாவாண நகரத்திற் சென்று அவ்விடத்தே விரும்பி உண்டு ஆடி மகிழ்ந்ததன் பின்னர் ஒருநாள், வாசவதத்தையை அம்மன்னவன் பிரிந்தகல நேர்ந்த பொழுது அவன் உறையும் அரண்மனையில் தீக்கொளுவி, ஆங்கே அமைக்கப்பட்டுள்ள சுருங்கை வழியே அவளை என்பால் விரைந்து செலுத்திக் கொணர்தல் நும்முடைய கடமையாகும் என்று கூறி என்க. என்க.
 
(விளக்கம்) 225, ஆதியிற் பட்டதென்றது தனது நகரத்தை ஆருணியரசன் கைப்பற்றி ஆள்வதனை என்க,
    226. தொடுகழல் குருசில் - கட்டப்பட்ட. வீரக்கழலை யுடைய நந்தலைவனான உநயணன். வடுவுரை - பழிச்சொல்.
    227. இன்ப அளறு - காமவின்பமாகிய சேறு.
    228 முன்னர் அவனுற்ற துன்பந்துடைத்த தொழிலே போல இப்பொழுதும் ஆவன செய்து அவலம் ஒழிப்பி என்க அவலம் - அவலத்திற்கு காரணமான அவனது சோர்வு ; ஆகுபெயர். ஓழிப்பி- ஒழித்து.
    229, அவன்பால் வைத்த அன்பாலே நீயிர் மயங்காமல் என்ற வாறு. திகையா- மயங்காமல்.
    230. இகல்-போர். இலாவாணம்-ஒரு நகரம்,
    232 மாதர் ; வாசவதத்தை. அகல்விடை-அகன்ற செவ்வியல்
    233 கோலம் ; அழகு, கோயில் - அரண்மனை கூர்எரி மிக்க நெருப்பு.
    234. பொய்ந்நிலம்-சுருங்கை,. போத்தந்து - செலுத்தி. கண்ணென ; விரைவுக் குறிப்பு. என்வயின் -என்பால்.