உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          தவமுது மகளைத் தலைமகற் குறுகி
          முகனமர்ந் நுரைத்து முன்னையிர் ஆமினென்
          றகனமர் காதலொ டாற்றுளி விடுப்பக்
          காட்டகங் கடந்து காவலன் இருந்த
    265    நாட்டக நணுகி நகரம் புக்கனள்
          தெரிமதி அமைச்சனொடு திறவதிற் சூழ்ந்த
          அருமதித் திண்கோள் அறம்புரி மகளென்.
 
        261 - 267 ; தவமுதுமகளை...............மகளென்
 
(பொழிப்புரை)   இடபகன் சாங்கியத்தாயை விரும்பிநோக்கி,'' நீயிர் இனி உதயணன்பாற் சென்று பண்டுபோல இருமின் ''  என்று கூறி நெஞ்சநிரம்பிய அன்போடே மரபிற்கேற்ப முகமன் கூறி  விடைகொடுப்ப, யூகியுடனே பின்னர் நிகழ்த்தவேண்டிய வற்றைத் திறம்பட ஆராய்ந்து துணிந்தவளும், அரிய அறிவும், திண்ணய கொள்கையும், அறத்தையே விரும்பும் இயல்பும் உடையவளும் ஆகிய அச்சாங்கியத்தாயும் அங்ஙனமே காட்டைக் கடந்து நாட்டினுட் புகுந்துசென்று உதயணன் இருந்த சயந்தி நகரத்திலே புகுந்தாள் என்க,
 
(விளக்கம்) 291. தவமுதுமகள் ; சாங்கியத்தாய், தலைமகற் குறுகி - உதயணன்பாற் சென்று,
    292. முன்னையிராமின் என்று முகனமர்ந்துரைத்து என மாறுக. முகனமர்ந்து - முகத்தானே விரும்பி, முன்னையிராமின் - பண்டிருந்தாற்போல இருமின்.
    293, அகன் அமர் காதல் - நெஞ்சின் ஆழத்தே பொருந்திய அன்பு , ஆற்றுளி - முறைப்படி. முகமன் கூறு முறைப்படி கூறி என்க.
    294. காவலன் - உதயணன்.
    296, தெரிமதியமைச்சன் என்றது யூகியை. திறவிதல் - செவ்விதாக. மகள் ; சாங்கியத்தாய்.

9. யூகி சாக்காடு முற்றிற்று,