|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 10 . யூகிக்கு விலாவித்தது | | 20 போகிய புகழோற்குப்
பொருக்கென உரையாள்
ஆங்கவன் கேட்ப அறிவின் நாடி
சாங்கிய முதுமகள் தான்தெரிந்
துரைக்கும் ஒலிஉஞ்
சேனையுள் வலியோரை வணக்கி
நங்கையைத் தழீஇநீ போந்த
கங்குல் 25 பட்டதை யெல்லாம் பட்டாங்
குணர்ந்து மறுபிறப்
புணர்ந்த மாந்தர் போல
உறுகுறைக் கருமம் உள்ளக மருங்கின்
தானே உணரின் அல்லது
புறப்பட் டேனோர் அறியா
இயற்கைத் தாகிக் 30 காரிய முடிவின் ஆரிருள்
மறையா
| | 20 - 30 : போகிய
,,,,,,,,காரியமுடிவின்
| | (பொழிப்புரை) அங்ஙனம் வினவிய
புகழோனுக்கு ஞெரேலென விடை கூறாமல் அவன் பொருந்திக் கேட்குமாற்றானே
தனது அறிவாலே ஆராய்ந்து அத்தவமூதாட்டி ''தெளிந்து கூறுவாள் ;
'மன்னவன் மகனே ! உச்சைனி நகரத்தின்கண் வலிமையுடைய வீரரை
எல்லாம் அடக்கி நீ வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு புறப்பட்டு
வந்த அவ்விரவிலே யூகி ஆண்டு நிகழ்ந்த நிகழ்ச்சிகளை எல்லாம்
நிகழ்ந்தபடியே அறிந்து கொண்டு, அவற்றைப் பிறர் அறியாதபடி
தன் நெஞ்சினுள்ளே அடக்கிக் கொண்டு ஆண்டுத் தான் ஆற்ற வேண்டிய
செயல்கள் ஆற்றி முடித்த பின்னர்' என்க.
| | (விளக்கம்) 20.
போகிய புகழோன் - உலகெலாம் பரந்து சென்ற புகழையுடைய உதயணன்.
பொருக்கென; விரைவுக்குறிப்பு. பொருக்கெனச் சொல்லின் அத்துயரத்தை
உதயணன் பொறாது இறந்துபடுவன் என்று கருதி அங்ஙனம் கூறாமல்
என்றவாறு. 21, அறிவினாலே ஆராய்ந்து அவன் பொறுக்கும்
ஆற்றினைத்தெளிந்து அவ்வாற்றானே உரைப்பாள்
என்க. 23, ஒலி உஞ்சேனை - ஆரவாரமுடைய உச்சைனி
நகரம், நீ புறப்பட்டமையார் ஆரவாரமுடைத்தாகிய என்பது
கருத்து. 23, வலியோர் - மறவர்.
24. நங்கை ; வாசவதத்தை. 26 பட்டது - நிகழ்ந்தது. பட்டாங்கு -
நிகழ்ந்தபடியே, 27, அவதிஞானமெய்திய சான்றோர்
தங்கருத்தினைத் தம்முள்ளே அடக்குதல் போலத் தான்
அறிந்ததனைத் தானறிதலன்றி அது பிறர்க்கு அறியவியலாதபடி தன்னுள்ளே
அடக்கி என்க, ஆகி என்பதனை ஆக எனத் திரித்துக் கொள்க. காரியம் தான்
ஆண்டுச் செய்ய வேண்டிய செயல் என்க
|
|