உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
          முகிழ்விரற் பணைத்தோள்
          வாசவ தத்தையை வகையுளிக் காண்கெனத்
    40    தேச மன்னன் திறத்துளிக் கூறக்
          கன்றுகாண் கறவையிற் சென்றவட் பொருந்தித்
          தளர்நடை இளமையில் தான்கொண்டோம்பிய
          வளர்கொடி மருங்குல் வருந்தப் புல்லி
          உவகைத் தண்துளி ஊழ்ஊழ் சிதறி
 
        38 - 44 ; முகிழ்விரல்,,,,,,,,,,சிதறி
 
(பொழிப்புரை) காநதள் அரும்பு போன்ற விரலையும், மூங்கில் போன்ற தோளையும் உடைய வாசவதத்தையை முறைப்படி சென்று காண்மின்! என்று உதயணன் சாங்கியத்தாய்க்குக் கூறுந் திறத்தாலே கூறா நிற்ப; அவளும் தனது கன்றை விரும்பிக் காணச் செல்லும் கறவைப்பசுப் போல விரைந்து சென்று அவ் வாசவதத்தையை எய்தி, குழவிப் பருவந்தொட்டுத் தான் மேற்கொண்டு பாதுகாத்த அவளது கொடியிடை வருந்தும்படி இறுகத் தழுவிக்கொண்டு இன்பக் கண்ணீர் உகுத்து நின்று என்க,
 
(விளக்கம்) 38. முகிழ் - ஈண்டுக் காந்தளரும்பு, பணை - மூங்கில்
    39 வகையுளி-முறைமையினாலே, காண்க - காண்மின்,
    40. தேசமன்னவன் ; உதயணன். திறத்துளி - கூறுந்திறத்தாலே.
    41 அவள் - அவ் வாசவதத்தையை.
    42. வளரும் பூங்கொடி போன்ற நுண்ணிடை என்க. ஆதரத்துடன் இறுக்கத் தழுவி என்றவாறு.
    43. உவகைக் கண்ணீர் ஆகலின், ''தண்டுளி'' என்றார் ஊழூழ் முறைமுறையாக அடுத்தடுத்து என்றவாறு.