உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
         
    45    அமிர்துகடை கடலின் அரவம் ஓவாது
          தமர்தலை மணந்த தன்பெருங் கோயிற்
          கண்ணீர் வெள்ளங் காலலைத் தொழுக
          வட்டிகை வாக்கின் வனப்பொடு புணர்ந்த
          பட்டச் சின்னுதற் பதினா றாயிரர்
    50    நும்மோய் மார்களுந் தம்மின மகளிரும்
          ஒருதுணை ஆயமும் உடைவுகொண் டொழியப்
 
        45 - 51 அமிர்து.......உடைவு கொண்டொழிய
 
(பொழிப்புரை) அமிழ்தம் வரக் கடையப்பட்ட பாற்கடல் போன்று இடையறாத ஆரவாரத்தோடே சுற்றத்தார் வந்து குழுமிய அரண்மனையின்கண் . நீ பிரிந்த காலத்தே பொற்பட்ட மணிந்த நெற்றியையுடையராகிய நின் தாயர் பதினாறாயிரவரும் அவர் தம்மினத்தாராய மகளிரும் நின் தோழியரும் நெஞ்சுடைந்து தங்கண்ணீர் வெள்ளமாகப் பெருகிக் காலை அலைத்து ஓடும்படி புலம்பா நிற்ப என்க.
 
(விளக்கம்) 45. மந்தரமலையை மத்தாகக் .கொண்டு அமரரும் அசுரரும் திருப்பாற் கடலை அமிழ்தெழக் கடைந்த பொழுது ஆண்டு எழுந்த ஆரவாரம் போல இடையறாது அரண்மனையில் ஆரவாரம் உண்டாக என்றவாறு.
    46, தமர் தலைமணந்த - சுற்றத்தாரால் குழுமப்பட்ட, பெருங்கோயில் - அரண்மனை.
    48 - 50 ஓவியப் பலகையின்கண் எழுதிய சித்திரத்தின் திருத்தத்தைப் போல அழகமைந்த நுந்தாய்மார், பட்டமணிந்த சிறிய நுதலையுடைய நுந்தாய்மார் எனத் தனித்தனி கூட்டுக. வட்டிகை - ஓவியப்பலகை. வாக்கு - திருத்தம், சின்னுதல் - சிறிய நெற்றி. நும்மோய் - நும் தாய்மார்; நும் என்றது, அவள் உடன் பிறந்தாரையும் உளப்படுத்தியபடியாம், இனமகளிர் - அவரைச் சார்ந்த மகளிர்,  
    51. ஒப்பற்ற துணையாகிய நின் தோழியரும் என்க. உடைவு - உடைதல்.