உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
          முகததொளி புல்லென
          நிறைமலர் நெடுங்கண் நீஇர் நெகிழத்
          தமர்வயின் நினைஇய தன்மையள் ஆகிப்
    60    புகரில் கோலத்துப் புனையிழை புலம்பத்
          தாழ்நகை ஆகத்துத் தண்சாந்து சிதைய 
          வீழ்தரு வெந்துளி விரலின் நீக்கிச் .
          செவிலித் தவமகள் தேறக் காட்டி
          அவலங் கோடல் அங்கண் ஞாலத்து
    65    வெங்கண் வேந்தன் பைந்தொடிப் பாவாய்
          மங்கல  மகளிர்க்கு மரபன் றிதுவென
 
        57-66 ; முகத்தொளி ... மரபன்றிதுவென
 
(பொழிப்புரை) அதுகேட்ட வாசவதத்தை தன்முகம் ஒளியிழந்து புற்கென்னும்படி தன்னைப் பிரிந்த தனது சுற்றத்தாரின் துன்பநிலையை நினைக்கும் தன்மையுடையளாகித் தனது மலர்க்கண்களினின்றும் நீர் துளிப்ப மார்பின்கட் சாந்தழியும்படி வீழாநின்ற வெவ்வியஅக்கண்ணீரை செவிலியாகிய சாங்கியத்தாய் தனது விரலாலே நீக்கிப் பாவாய்! துன் புறாதேகொள்! இது மங்கல மகளிர்க்குப் பொருந்துவதன்று, என்றுஅவள் மனந்தெளியும்படி எடுத்துக்காட்டி என்க.
 
(விளக்கம்) 57. முகம் ஒளியிழந்து புல்லென என்க.
    58. மலர் - தாமரைமலர். கண்நிறை நீர்நெகிழ என மாறுக.
    59. தமர்வயின் உண்டான துன்பத்தை நினைஇய தன்மையளாகி எனவிரித்தோதுக.
    60, புகர்இல் கோலம் -குற்றமில்லாத அழகு, புனையிழை; அன்மொழித் தொகை.
    61, நகைதாழ் ஆகத்து என மாறுக. நகை-முத்துவடம்.ஆகம்-மார்பு, தண்சாந்து - குளிர்ந்த சந்தனம்.
    62, துன்பக் கண்ணீராகலின் வெந்துளி என்றார்.
    63.செவிலித்தவமகள் - செவிலித்தாயாகிய சாங்கியத்தாய்.
    64. அவலம்-துன்பம். கோடல்-கொள்ளாதே, அம்கண்- அழகிய இடம மைந்த.
    65. வெங்கண் - தறுகண் , வேந்தன் ; பிரச்சோதனன். பாவாய் ; ஆகுபெயர் விளியேற்று நின்றது.   மங்கலமகளிர் - சுமங்கலி . இது - இங்ஙனம் வருந்துவது.