உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
          இடம்படு ஞாலத் துடம்பொடு புணர்ந்த
          இன்னியன் மாந்தர் திண்ணியல் உறுப்பினுள்
    100    தாளே பெருங்கிளை தோளே துணைவி
          பல்லே மக்கள் கண்ணே தோழர்
          முடியே குரவர் அடியே ஆளாம்
          ஆக்கையி னாடி அங்ஙனங் காணின்
          மேற்கட் குற்றது விதுப்பியல் வழாது
    105    நூற்கண் நுனித்த நுண்ணுணர் வெண்ணத்தின்
          யூகி  தன்வயின் உறுகண் வெந்தொழில்
          ஆகிய துண்டென ஐயந் தேறி
 
        97 - 107; இடம்படு,,,,,,,,,தேறி
 
(பொழிப்புரை) உலகத்தின்கண் உடம்போடு தோன்றி வாழும் மாந்தருடைய திண்ணிய உறுப்புக்களுள் வைத்து, அவர் தம் கால் சுற்றத்தார் ஆகும், தோள் மனைவியாரும், பல்மக்களாகும். கண் நண்பராகும் முடி ஐம்பெருங் குரவர் ஆகும், அடி ஏவலர் ஆகும்; இவ்வாறு உடலின்கண் ஆராய்ந்து பார்க்குமிடத்து இவ்வுருவம் தனது மேற்கண் மழுங்கியிருக்கம் குற்றம் உடைமையின் யூகிக்குத் துன்பமானதொரு நிகழ்ச்சி உண்டாயதுஎன்று எண்ணி நடுங்குதல் தவிரானாய் அதனை ஐயுற்றுப் பின்னர்த் தெளிந்து என்க.
 
(விளக்கம்) 98, இடம்படு ஞாலம்- விரிந்த இடம் அமைந்த இவ்வுலகம்.
    99, இனிய பண்புடைய மாந்தருடைய திண்ணிய தன்மையுடைய உறுப்புகளுள் என்க,
    100, தாள்-கால். துணைவி-மனைவி
    102. முடி-தலை ஆள் - ஏவலர், இவ்வுறுப்புக்கள் இன்னின்னவரை ஒக்கும் என்பதாம்
    103, ஆக்கை -உடம்பு. அவ்வாறு ஒப்பிட்டு நோக்குமிடத்து , என்கண் போன்ற தோழனாகிய யூகிக்கு இடுக்கண் உற்றதுண்டு என்பதை இவ்வோவியம் குறிக்கின்றது என்று கருதினான் என்க. .தன்  அமைச்சர் நால்வருள் முதல்வன். யூகியே ஆதலால் நாற்கண்ணினும்  மேற்கண்   அவனையே குறிக்கும் என்று கருதினான் என்பதாம்.  
    105. நூலிடத்தே கூரிதாகக் கற்றுப் பெருகிய நுண்ணுணர்வினாலே ஆராய்ந்து எண்ணிய எண்ணத்தாலே உண்டென்று ஐயுற்றுப் பின் தேறி என்க.   
    106, உறுகண் -துன்பம். உறுகண் வெந்தொழில் என்றது சாக்காட்டினை; என்னை ? 'சாதலின் இன்னாதது இல்லை' ஆகலின். விதுப்பியல் வழாஅது - நடுங்குதலினின்  றும் வழுவாமல் (நடுங்கி) என்றவாறு.
     இங்ஙனம் யூகி இறந்தான் என்று துணிந்த உதயணண் ஆற்றாது  வருந்துதல்