உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
         
        இடியே றுண்ட நாகம் போலக்
        கொடியேர் சாயற் கொழுங்கவின் வாடப்
        பூவிருங் கூந்தல் புல்லென விரிய
  115    வாசவ தத்தையும் வத்தவன் மார்பின்
        மம்மர் எய்திய மயக்க நோக்கி 
        விம்மல் எய்தி வியன்பெருங் கோயில்
        அழுகை ஆகுலங் கழுமிய பின்றை
 
           112 -118; இடி,,,,,,,,பின்றை
 
(பொழிப்புரை) உதயணன் இங்ஙனம் - மூர்ச்சித்து வீழ்ந்தமை கண்ட வாசவதத்தையும் இடிஏறு கேட்ட  நாகப்பாம்பு போலத் தனது சாயலும் அழகும் வாடும்படியும் கூந்தல் பொலிவிழந்து விரியாநிற்பவும் அவன் மார்பின்கண் சாய்ந்து மயங்கி  மூர்ச்சையுற்றாள் ; அதுகண்ட அரண்மனையினுள்ள ஏனை மகளிரும் பிறரும் நெஞ்சம் பொருமி அழுதலாலே அவ்வரண்மனை அழுகையொலியான் நிரம்பாநிற்பப் பின்னர் என்க.
 
(விளக்கம்) 112. இடியேறுகேட்ட நாகம் என்க.
     113, பூங்கொடிபோன்ற மென்மையும் கொழுவிய அழகும் என்க.
     114. பூச்சூடப்பட்ட கரிய கூந்தல் புற்கென்று விரிய என்க
     116 மம்மர்-மயக்கம்;மூர்ச்சை. அம்மயக்கத்தை நோக்கி என்க
     117. அகன்ற பெரிய அரண்மனை என்க.
     118,ஆகுலம்-ஆரவாரம், கழுமிய-நிறைந்த ; இகனைச்  செயவெனெச்சமாக்குக.