உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
         
        மாதாங்கு தடக்கை மன்னருள் மன்னவன்
        நளிகதிர் மண்டில நாண்முதல் தோன்றி
        ஒளியிடப் பெறாஅ உலகம் போல
  135    இருளகம் புதைப்ப மருளகத் தெய்தித்
        தருமமுங் கருமமுந் தளரச் சாஅய்
        ஆழின் அல்லதை அரசியல் வழாமை
        வாழ்தல் ஆற்றேன் யானென மயங்கியும்
 
           132-137 -  ; மாதாங்கு,,,,,,,,மயங்கியும்
 
(பொழிப்புரை) அவ்வுதயணன் ஞாயிறுதோன்றி ஒளிசெய்யப்படாத உலகம்போலத் தனது நெஞ்சத்தைத் துயரஇருள் மறைத்தொழிதலானே மயங்கி இனி யான் அறங்களும் செயல்களும் தளரும்படி இளைப்புற்றுத துன்பக் கடலிலே அழுந்துதலன்றி, எனது அரசியலின்கண் வழுவாமனின்று வாழகில்லேன் என்று அரற்றி மீண்டு மயங்கியும் என்க.
 
(விளக்கம்)    132,யானையைத் தடுத்து வயமாக்கி நடத்தும் பெரிய கையினையுடையவனும், அரசர்க்கரசனுமாகிய உதயணகுமரன் என்க.
    133.. நளிகதிர் மண்டிலம்-செறிந்த கதிரையுடைய ஞாயிற்று மண்டிலம். நாள்முதல் - வைகறைப் பொழுது. ஞாயிறு - யூகிக்கும்.
    134. உலகம் உதயணன் நெஞ்சத்திற்கும் உவமைகள்.
    135. மருள்-மயக்கம். அகம்-நெஞ்சு,
    136. தருமம்-அரசியலறம். கருமம்- அரசியற் செயல். சாஅய்- இளைத்து.
    137. ஆழின் அல்லதை- துன்பத்திலே அழுந்துதலன்றி