உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
           பூந்தார் மார்ப புலம்புகொண் டழீஇ
           இருநில வரைப்பின் இயற்கை ஓராப்
     160    பெருநிலங் காவல பேணா தவர்முன்
           இனையை ஆகுதல் இறைமை அன்றால்
           கொடுங்காழ் சோரினுங் கூடம் ஊன்றிய
           நெடுங்காழ் போல நிலைமையின் வழாஅது
           துன்பத்தில் துளங்கா தின்பத்தின் மகிழா
     165    தாற்றுளி நிற்றல் ஆடவர் கடனென
           மாற்றம் பற்பல மரபிற் கூறி
 
        (உருமண்ணுவா உதயணனைத் தேற்றுதல்)
             158 - 166 ; பூந்தார்......மரபிற்கூறி
 
(பொழிப்புரை) அதுகண்ட உருமண்ணுவா 'பூந்தார் மார்ப ! உலகியல்பினை எண்ணிப்பாராத காவலனே. !, நீ நம் பகைவர் முன்னர் அழுதலை மேற்கொண்டு இத்தன்மையுடையை ஆதல் நினது தலைமைத் தன்மைக்குப் பொருந்துவதொன்றன்று. வளைந்த கைமரங்கள் ஆக்கையற்றுக் கீழே வீழ்ந்த விடத்தும் தன்னிலைமையிற் றளராது நிலைத்து நிற்கும் தூண்போன்று துன்பம் வந்த பொழுது நடுங்காமலும் இன்பம் வந்த காலத்து மகிழாமலும் தம் நிலைமையிலேயே உறுதியாக நிற்றல் வீரர்கட் குரிய  கடமையாகும்'' என இன்னோரன்ன மொழிகள் பல முறைமையோட கூறி என்க,
 
(விளக்கம்) 158. மார்ப; விளி. புலம்பு - துன்பம் : அழுகை. அழீஇ - அழிந்து; நெஞ்சழிந்து.
     159. இரு நிலவரைப்பு - பெரிய மண்ணுலகம்.இரு நிலவரைப்பின் இயற்கை என்றது  இவ்வுலகப் பொருள்கள் அனைத்தும் நிலையுதலில்லாதன ஆகும் இயல்பு என்றவாறு,
     160. காவல; விளி . பேணாதவர் - ஆருணியரசன் முதலிய பகைவர்.
     161. இனையை - இத்தன்மையுடையை இறைமை - தலைமைத்தன்மை 
     162, கொடுங்காழ்-வளைந்த கைமரங்கள்.கூடம் ; ஓர் இல்லுறுப்பு. ஊன்றிய - ஊன்றப்பட்ட. நெடுங்காழ்  - நெடிய தூண் .
     164. துளங்காது - நடுங்காமல். மகிழாது -பொச்சாப்பு எய்தாமல், எனவே உதயணன் உவகை மகிழ்ச்சியிற்  சோர்ந்திருத்தலையும் எடுத்துக்காட்டுதல் உணர்க,
     165, ஆடவர் - வீரர் என்பது பட நின்றது. மாற்றம் - மொழி.