உரை
 
2. இலாவாண காண்டம்
 
10 . யூகிக்கு விலாவித்தது
 
           யடநடுதரூட டங்கண் டபுத்த
           அந்த ணாளரின் வெந்திறல் வீரன்
           சொற்றுணைத் தோழன் தொழில்பா ராட்டி
     170    நற்றுணை மாந்தர் முற்றுணை யாக
           அரசியல் ஆக்கங் கூடு மாயினும்
           பெருவிறல் தோழன் வருதலும் உண்டெனத்
           தானயர் பெருநெறித் தலைநின் றனனால்
           வீணை வித்தகன் விலாவணை தொடர்ந்தென்.
 
        168 - 174; அடநடுதர்,.,....தொடர்ந்தென
 
(பொழிப்புரை) மேலும் அவ்வூகியினது அமைச்சுத் தொழிற்றிறத்தைத் தானும்  இடையிடையே பாராட்டி அமைச்சர் முதலியோருடைய உதவியாலே நின் அரசியல் நினக்கு உரியதாகும் பொழுது அவ்யூகி பிழைத்து வருதலுங்கூடும் என்று கூறித் தேற்றா நிற்பவும், தேறானாய்த் தான் வருந்தும் அந்நெறியிலேயே அவ்வீணை வித்தகன் தொடர்ந்து செல்லாநின்றனன்  என்க.
 
(விளக்கம்) 167. அடநடுதரூடடங்கண் தபுத்த அந்தணாளர் என்போர் ஈண்டு உருமண்ணுவாவிற்கு உவமையாகக் கூறப்பட்டனர் போலும். இவ்வடியாலே கூறப்படும் அந்தணாளரும் அவர்தஞ் செயலும் நன்கு விளக்கமுறவில்லை.
    168. வெந்திறல் வீரன் என்றது உருமண்ணுவாவினை,
    169, சொற்றுணைத் தோழன் என்றது யூகியை. ஒருவர்க்கு இரங்குவாரைத் தேற்ற முயல்வோர் அவரால் இரங்கப்படுவோர் குணநலங்களைப் பாராட்டுதல் ஓர் உலகியல்பாதல் நுண்ணிதின் உணர்க.
    170. நற்றுணை மாந்தர் - ஐம்பெருங் குழுவினர் முதலியோர் 
    171. ஆயினும் என்புழி உம்மையை அசைச் சொல்லாகக் கொள்க, தோழன்;யூகி
    173. அயர் பெருநெறி-அயர்தற்குக் காரணமான பெரிய வழி .
    174 வீணைவித்தகன்; உதயணகுமரன். விலாவணை - புலம்பல்.

             10. யூகிக்கு விலாவித்தது முற்றியது
              -------------------------------