உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
         காவலன் அதிர்ந்த காலை மண்மிசைத்
         தாவில் பல்லுயிர் தளர்ச்சி எய்தலின்
         எத்திறத் தாயினும் அத்திறம் அகற்றுதல்
         மந்திர மாந்தர் தந்திரம் ஆதலின்
    10   வத்தவர் கோமாற் கொத்த உறுதொழில்
         உத்தம மந்திரி யூகியிற் பின்னர்
         அருமை சான்ற ஆய்பொருட் கேள்வி
         உருமண் ணுவாவிற் குறுகடன் இதுவெனத்
         தாழாத் தோழர் தன்மேல் வைத்தபின்
 
        6 - 14 ;  காவலன்.....,,,...வைத்தபின்
 
(பொழிப்புரை) மன்னவன் தளர்ச்சி எய்தியபொழுது மன்னுயிர் எல்லாம் தளர்ச்சி எய்துதல் இயல்பு; அங்ஙனம் தளர்ச்சி எய்திய பொழுது எவ்வாறாயினும் முயன்று அம் மன்னவன் தளர்ச்சியைப் போக்குதல் அவன்றன் அமைச்சர்க்குரிய கடமையாம்; ஆகலின் யூகிக்குப் பின்னர் உதயணகுமரனுக்கு எய்திய தளர்ச்சியைப் போக்குதல் உருமண்ணுவாவின் கடமையேயாயிற்று என்று கூறி அக்கடமையைத் தோழர், அவ் உருமண்ணுவாவின் மேலதாக்கி வைத்தபின்னர் என்க.
 
(விளக்கம்) 6. அதிர்ந்தகாலை - துன்பத்தால் நடுக்கமுற்றபொழுது என்க.
     7. தாஇல், - குற்றமற்ற.
     8, எத்திறத்தாயினும் - எவ்வுபாயத்தாலேனும்.
     9. அத்திறம் - அத்தளர்ச்சியை. மந்திர மாந்தர் - மந்திரச் சுற்றத்தார்; அமைச்சர், தந்திரம்- ஈண்டு ஆகுபெயராய்க் கடமைக்காயிற்று.
     10. வத்தவர்கோமான் - உதயணகுமரன்.
     11. உத்தம மந்திரியாகிய யூகி என்க.
     12. உணர்தற்கரிய தன்மை நிரம்பியதும், ஆராய்தற்குரியதுமாகிய நூற்கேள் வியையுடைய உருமண்ணுவாவிற்கே என்க.
     14. குறையாத பெருமையையுடைய தோழராகிய ஏனை அமைச்சர் என்க. தன்மேல் வைத்தபின் - தன் கடமையாக்கி வைத்தபின்னர் என்பதாம். (தன் -உருமண்ணுவா).