உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
         
      15   வீழாக் காதலொடும்   விரும்புவனன் ஆகிச்
           செய்பொருள் இதுவென ஐயந் தீர
           மன்னுயிர் ஞாலக் கின்னுயிர் ஒக்கும்
           இறைபடு துன்பங் குறைபட எறியும்
           மருந்தின் பிண்டந் தெரிந்தனிர் கேண்மின்
 
           [ உருமண்ணுவாவிண் கூற்று ]
          15 - 19. வீழாக்கதல்,.,,,,,,,கேண்மின்
 
(பொழிப்புரை) அக்கடமையை ஏற்றுக் கோடற்கண் கெடாத விருப்பமுடையனாய் அவ் ''உருமண்ணுவாவும், தன் தோழரை நோக்கி உணர்வுடையீரே! நமது வேந்தன்படும் துன்பந்தீரும்படி அவனுக்கு ஊட்டற்பாலவாகிய மருந்தின் தொகுதியையான் கூறக் கேண்மின்'' என்றான், என்க,
 
(விளக்கம்) 15. வீழாக்காதல் - குறையாத அன்பு.  விரும்புவனன் - விரும்புவோன். 
    16. செய்பொருள் - யாம்செய்யற்பால செயல்.
    17. நிலைபெற்ற உயிர்த்தொகுதியையுடைய உலகத்திற்கு உயிர் எனச்   சிறந்த அரசன் என்க, ''நெல்லும் உயிரன்றே நீரும் உயிர் - அன்றே   மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்''(புறநா, 186)என்றார் பிறரும்,  குறைபட -தணிய. எறியும் என்றது தீர்க்கும் என்பதுபட  நின்றது.    19, பிண்டம்-தொகுதி. தெரிந்தனிர் ; விளி. அறிவுடையீரே என்று  விளித்தபடியாம்,