உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
         
     20   தணப்பில் வேட்கை தலைத்தலை சிறப்ப
          உணர்ப்புள் ளுறுத்த ஊடல் அமிர்தத்துப்
          புணர்ப்புள் ளுறுத்த புரைபதம் பேணும்
          காமக் காரிகைக் காதன் மகளிர்
          தாமப் புணர்முலைத் தலைபிணி உறீஇ
     25   யாமக் கோட்டத் தருஞ்சிறைக் கோடல்
 
        [ உதயணன் துன்பம்போக்கும் உபாயங்கள், ]
             20 - 25 ; தணப்பில்,....,.....சிறைக்கோடல்
 
(பொழிப்புரை) 15. வீழாக்காதல் - குறையாத அன்பு. நீக்கமில்லாத விருப்பம் இடந்தொறும் இடந்தொறும் மிகாநிற்ப உணர்த்துதலை உட்கொண்ட ஊடலாகிய அமிழ்தத்தினது, புணர்தலை உட்கொண்ட உயரிய பதன் அழியாமற் பேணுதற்குரிய காமத்தையும், அழகையும், காதலையும் உடைய மகளிர் தம் முலையிற் பிணித்து உவளகமாகிய தப்புதற்கரிய சிறைக்கோட்டத்திலே வைத்தலும், பகை மன்னர் வாழ்வு கெடும்படி வென்று அவர்தரும் அரிய திறைப்பொருளைக் கொணர்ந்து முன்னே குவித்தலும், மலைவளம் காட்டுவளம் முதலியவற்றைக் காட்டி மகிழ்வித்தலும் என்க. விரும்புவனன் - விரும்புவோன். 16. செய்பொருள் - யாம்செய்யற்பால செயல். 17. நிலைபெற்ற உயிர்த்தொகுதியையுடைய உலகத்திற்கு உயிர் எனச் சிறந்த அரசன் என்க, 'நெல்லும் உயிரன்றே நீரும் உயிர் - அன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்'(புறநா, 186)என்றார் பிறரும், குறைபட -தணிய. எறியும் என்றது தீர்க்கும் என்பதுபட நின்றது. 19, பிண்டம்-தொகுதி. தெரிந்தனிர் ; விளி. அறிவுடையீரே என்று விளித்தபடியாம்,
 
(விளக்கம்)     20. தணப்புஇல் - பிரிவில்லாத. 21, ஊடியவழி அதனை உணர்த்தல் ஒருதலையாகலின் உணர்ப்புள்ளுறுத்த ஊடல் என்றார்; 'ஊடுதல் காமத்திற்கு இன்ப' மாகலின் அதனை அமிர்தம் என்றார், ஐம்பொறி நுகர்ச்சிகளையும் உடைய மகளிர்பால் ஊற்றின்பமே தலை சிறந்ததாதல் பற்றி அதனை விதந்தோதுவார் புணர்ப்புள்ளுறுத்த புரைபதம் என்றார். புரைபதம் பேணும் - உயர்ந்த செவ்வி கெடாமற் பாதுகாக்கும் (மகளிர்) என்க. அஃதாவது ஊடல்மிக்க வழிக் கூடல் இன்பமின்றாதல் அறிந்து காமம் பதனழியாது உணர்ந்து கூடுகின்ற மகளிர் என்றவாறு.

    23. காரிகை - அழகு, பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கஞ்
சிறந்ததன்றென்பது தோன்ற காதன் மகளிர் என்றார்.

    24. தாமம் - மாலை. புணர்தற்குக் காரணமான முலை என்க,
பிணியுறீஇ - பிணைத்து. 25. யாமக்கோட்டம் என்றது உவளகத்தை; தப்புதற்கரிய சிறை என்க. கோடல் - கொள்ளுதல்,

    26. வணங்காமன்னர் - பகையரசர். வாழ்வுகெட முருக்கி அணங்குதலானே வரும் பெருந்திறை என்க. அணங்கு - துன்பம்.

    28, பூமலர்; இருபெயரொட்டு, பொதுளிய - நிரம்பிய, புனலையுடைய மலையின்கட் சோலை என்க. ''

    29. கானம் - காடு,