உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
          இன்றே யன்றியுந் தொன்றுவழி வந்த
          குன்றாக் கற்பினெங் கோப்பெருங் கிழவோள்
          நித்திலம் பொதிந்த இப்பி போலத்
     50   திருவயிற் றகவயின் உருவொளி அறாஅ
          நின்னைத் தாங்கிய நன்னாள் அமயத்துக்
          கண்ணிழல் ஞாறிய காமர் பள்ளியுள்
          வெண்ணிலா முற்றத்து விரும்பி அசைதலின்
          ஒள்ளொளி அரத்தம் ஊனென நசைஇப்
     55   பல்வலிப் பறவை பற்றுபு பரிந்து
          விபுலம் என்னும் வியன்பெருங் குன்றத்(து)
          அருவரை அருகர் ஆய்நலங் கவினிய
          ஆலங் கானத் தணியொடு பொலிந்த
          ஞாலங் காவல் நஞ்சென நீக்கிப்
     60   பாய்பரி இவுளி ஏயர் பெருமகன்
          தன்கட் கொற்றம் எல்லாந் தன்மகன்
          வென்றித் தானை விக்கிரற் கருளி
          மறுவில் நெஞ்சமொடு மாதவந் தாங்கி
          உறுபெருங் காட்சி ஓங்கிய படிவத்(து)
     65   அறம்புரி தந்தை பள்ளிய தருகர்ப
 
        46 - 65 . இன்றே...,...,......,வைத்தலும்
[உதயணன் வரலாற்றினை அவனுக்கு நீயிர் இங்ஙனம் கூறி நினைவூட்டுமின் என்றல்.]
 
(பொழிப்புரை) வேந்தனே! இற்றை நாளிலே மட்டும் அன்றிப் பண்டும் எங்கோப்பெருந்தேவியார் முத்தினைக் கருக்கொண்ட இப்பிபோல நின்னைத் தம் கருவயிற்றாங்கியிருந்த காலத்தே அழகிய மேனிலைமாடத்து நிலாமுற்றத்தமைருந்த  படுக்கையின்கண் விரும்பித் துயில்கொண்டிருந்தாராக, அப்பொழுது ஆண்டுவந்ததொரு சிம்புள் அவர் செவ்வாடை போர்த் திருந்தமையானே அவரை இஃதோர் ஊன்திரள் போலும் என்று கருதி அவ்வூனை உண்ண விரும்பிப் பற்றிக்கொண்டு  சென்று விபுலம் என்னும் பெரிய மலையின் சாரலிலே தவஞ்செய்து கொண்டிருந்தவரும், அக்கோப்பெருந்தேவியாருடைய தந்தையும் ஆகிய துறவியினது தவப்பள்ளியினது பக்கத்தே பறந்து போகாநின்ற அப்பறவை மெத்தென நிலத்தின்கண் வைத்தது; அங்ஙனம் வைத்தவுடனே என்க.
 
(விளக்கம்) 46, இன்றேயன்றியும் நின்னைத் தாங்கிய நன்னாளமயத்தும் (149) காவலன் கடவுளை வினவ அவன் உரைத்தான் ஆதலின் யாமும் ஓர் (145) பனுவலாளனைக் கேட்டபின் அறிதும் எனமுடியும்; எனவே யாம் இன்று ஓர் முனிவனைக் கேட்டறிதும்; இங்ஙனம் அறிதல் இன்றே அன்றிப் பண்டும் உண்டு என்றவாறாம்.
    தொன்றுதொட்டு அடிப்பட்டு வந்த பண்பாகிய குன்றாத கற்பையுடைய கோப்பெருங்கிழவோள் என்க. அவள் ; மிருகாபதி,
    48, முத்தினைக் கருக்கொண்ட இப்பிபோல என்க. முத்து உதயண குமரனுக்கும், இப்பி மிருகாபதிக்கும் உவமை. உருவும் ஒளியும். அறாத நின்னை என்க. அழகும் ஒளியும் நீங்காத நின்னை என்றவாறு.
    50. உதயணனைக் கருக்கொண்ட - காலமாகலின் நன்னாள் அமயத்து என்றான்.
    51. தன் கண் ஒளிதோன்றிய அழகிய படுக்கையுள் என்க.
    52. அசைதலின் - உறங்குதலானே.
    53. அரத்தம்- செவ்வாடைக்கு ஆகுபெயர். நசைஇ-உண்ண விரும்பி.
    54. பல்வலியாலே சிறந்த பறவை என்றவாறு. அது சிம்புள். பற்றுபு - கால்களாலே பற்றிக்கொண்டு. பரிந்து - சென்று
    56. குன்றத்தினது அரியபக்கமலையின் பக்கத்தே என்க, ஆராய்தற்குக் காரணமான நலத்தால் அழகுற்ற ஆலங்கானம் என்னும் காட்டகத்தில் என்க.
    57 - 58. அழகோடே- பொளிவுற்ற உலகத்தைக்காக்குந் தொழிலை நஞ்சுபோல நீக்கி என்க.   
    59. ஏயர் பெருமகன் என்றது மிருகாபதியின் தந்தையை,
    61. கொற்றம் - ஈண்டு அரசுரிமை,
    59 - 64, ஏயர்பெருமகனாகிய தந்தை, மாதவந்தாங்கி அறம்புரி தந்தை, தன்கட் கொற்றமெல்லாம் தன்மகன் விக்கிரற்கு அருளி உறுபெருங்காட்சி ஓங்கிய படிவத்தந்தை என்று தனித்தனி கூட்டுக. 
    61, விக்கிரன் - உதயணன் மாமன்,
    62, மறு - குற்றம், ஈண்டுக் காமவெகுளி மயக்கங்கள்.
    63. பெருங்காட்சி - மெய்யுணர்ச்சி.
    64, அறம்-துறவறம், 65. பையென ; குறிப்புச்சொல்.