உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
          பறந்துசெல் சிம்புள் பையென வைத்தலும்
          கயலேர் கண்ணி துயில்ஏற் றெழவே
          உயிர்போய் உறாமையின் உறுபுட் போக
          அச்ச வகையினு மந்தரச் செலவினும்
     70   பொற்றொடி மாதர் பொறைநோய் கூர
          எல்லாக் கோளு நல்வழி நோக்கத்
          திருமணி விளக்கந் திசைநின் றழலப
 
        66 - 72; கயலேர்.......,,..கிடந்தோய்
 
(பொழிப்புரை) கயல் மீனை ஒத்த கண்ணையுடைய
  அக்கோப்பெருந்தேவியார் துயிலுணர்ந்து எழுதலானே அச்சிம்புள் உயிர் நீங்காமையை அறிந்து அகன்று போகாநிற்ப, அச்சத்தானும், வான்வழியே வந்தமையானும் தேவியார்க்குக் கருஉயிர்த் தற்றுன்பம் மிகாநிற்ப, அப்பொழுது கோள்கள் அனைத்தும் நன்றாகிய நெறியிலே இயங்காநிற்ப, அழகிய மணிவிளக்கம் திசைகளிடத்தே பரவிநின்று ஒளிவிடாநிற்ப மாணிக்கப் பாவை  போன்று பெருமானே !  நீ பிறந்து கிடந்தனை என்க.,
 
(விளக்கம்) 66. கயல் ஏர் கண்ணி - கயல்மீனை ஒத்த கண்ணையுடைய மிருகாபதி. துயிலின்றும் நீங்கி உணர்ச்சி ஏற்று எழாநிற்ப என்க.
    67. புள் - சிம்புள்,
    68. அச்சிம்புளைக் கண்டமையானே உண்டான அச்சவகை என்க. அந்தரச்செலவு - அப்பறவை, தன்னை அந்தரத்தே கொண்டு சென்ற செலவானும் என்க.
    69, பொறைநோய் கருவுயிர்த்தற்றுன்பம். கூர- மிக,
    71, ஞாயிறு முதலிய எல்லாக் கோள்களும் என்க. நல்வழி - நன்மையுண்டாதற்குக் காரணமான வழி. மணிவிளக்கம். கோப்பெருந்தேவியர் அணிந்திருந்த அணி கலன்களிலுள்ள மணிகளாகிய விளக்கங்கள் என்றவாறு. இனி அக்காட்டினூடே கிடந்த மணிகள் எனினுமாம், இங்ஙனமே திருத்தக்க முனிவரும் சீவகன் பிறந்தபொழுது,
    'இருள்கெட இகலி எங்கும் மணிவிளக் கெறிய ஏந்தி
    அருளுடை மனத்த வாகி அணங்கெலாம் வணங்கி நிற்பப்
    பொருகடற் பருதி போலப் பொன்னனான் பிறந்த போழ்தே
    மருளுடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்த தன்றே'
என்பர். (சீவக. 304)