உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
         செல்லா நின்ற சில்லென் காலை
         வெஞ்சின வேழ வெகுளி நீக்கும்     
         மந்திர நாமம் வந்துநீர் கன்மெனத்
    95   தேவ இந்திரனின் திருந்தப் பெற்ற
         ஆய்பெரு நல்லி்யாழ் அமைவர எழீஇக்
         கான யானையுங் கரந்துறை புள்ளும்
         ஏனைய பிறவும் ஆனா உவகையொடு
         கேட்டவை எல்லாம் வேட்டவை விரும்பி
    100   வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன்
         வரத்தின் வல்லே வல்லை யாகென
         உரைத்தம் முனிவன் உவந்தனன் கொடுத்துப்
 
        92 - 102 :  வெஞ்சின...............பெற்றவாறும்
 
(பொழிப்புரை) அப்பிரமசுந்தான் என்னும் முனிவர் நும்மை விரும்பியவராய் நீயிர் எம்பால் நடோறும் வந்து யாம் ஓதுவிக்கும் மந்திரங்களைக் கற்றுக்கொண்மின் என்று கூறிக் கற்பித்து மேலும் நினக்கு ஓர் யாழினைக் காட்டி அதனை இசையெழுப்பியும் காட்டி இஃது இந்திரன்பால் யாம் பெற்றதொரு தெய்வயாழாகும். இதனை வாசித்தால் காட்டியானை முதலியன உவகையோடு வந்து கூடியாம் விரும்பியவற்றைச் செய்யாநிற்கும்; ஆதலின் இதனை யாம் நினக்கு வரமாகத்தருகின்றேம். இதனையும் பெற்று இதனானும் நீ வல்லை ஆகுக என்று கூறிக்கொடாநிற்ப, இவ்வாற்றால் அத் தெய்வயாழினை அவ்வுதயணன் பெற்றதனையும் எடுத்துக்கூறி என்க.
 
(விளக்கம்) 93. மந்திரமாகிய நாமம்.
    95. ஆய் -ஆராயப் படும். அமைவர - பொருந்துதல் வர.
    96. கானயானை - காட்டியானை. கரந்துறைபுள் - மறைந்து வாழும் பறவை.
    97. ஆனா-அமையாத.
    101. அம்முனிவன் - அப்பிரமசுந்தரன் என்னும் துறவி, உவந்தனன் ; முற்றெச்சம். கொடுத்து என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாகக் கொள்க.
    102. இவ்வாற்றால் யாழ்பெற்ற வரலாறும்  என்க.