உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
         
   165   வினவிய பொழுதின் விரித்துரைத் தனனோர்
        பனுவ லாளனைப் பணிந்துகை கூப்பிக்
        கண்போற் காதல்நின் கழிபே ரமைச்சன்
        முன்போல் விளிந்து முடிக்குங் காரியம்
        உண்டு மாங்கொல் கண்டுவந் தோர்களைக்
   170   கண்டில மாதலிற் பண்பொடு புணரக்
        கேட்டபின் அறிதும் யாமென வேட்ப
        இன்னவை கிளந்துபின் தன்வயின் தழீஇ
 
        164 - 171 ; ஓர்..........தழீஇ
 
(பொழிப்புரை) நின் கண்போன்ற அன்பனாகிய யூகி நீ சிறைப்பட்ட காலத்தே செய்தாற் போன்று இன்றும் தான் இறத்தலானே செய்யக்கடவ காரியமும் ஒருகால் உளவாதல் கூடும்; அவற்றின் பொருட்டு இறந்தானாகக் காட்டியிருத்தலும் கூடும்; ஆதலானும் யூகி இறந்தனன் என்று யாம் ஊகித்துக் கொண்டதன்றி அவன் இறந்தமையைக் கண்கூடாகக் கண்டு வந்து கூறினோரை யாம் கண்டிலேம் ஆதலானும், யாமும் நின் தந்தைபோல ஒரு ஞான முனிவனைத் தலைப்பட்டு வணங்கித் தொழுது உண்மையோடு பொருந்தும்படி வினவியபின் உணர்ந்து கொள்வேமாக என்று வரும் இம் மொழிகளை அவ் வுருமண்ணுவா என்னும் அமைச்சன் அத் தோழர்கள் விரும்பும்படி எடுத்துக்கூறிப் பின்னர் அவரைத் தனித்தனி தன்பால் அழைத்துத் தழுவிக்கொண்டு என்க.
 
(விளக்கம்) 165. ''ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு'' (குறள்-21) என்பது  பற்றிப் பனுவலின்கண் எடுத்தாளப்படும் பெருமையுடைய முனிவனைப் பனுவலாளன் என்றார்.
    166. நின் கண்போன்றவனும் காதலையுடையவனும் மிகச் சிறந்த அமைச்சனுமாகிய யூகி என்க.
    167. முன்போல் என்பது - முன்னர் நீ பிரச்சோதனன் சிறையிடைக் கிடந்த பொழுது இறந்தானாகத் தன்னைக் காட்டிச் செய்தகாரியம் போல என்றவாறு. விளிந்து -இறந்து, காரியமும் உண்டுகொல் என உம்மையை பிரித்துக் கூட்டுக, கொல்; ஐயப்பொருட்டு. ஆம் ; அசைச்சொல், அவ்யூகி இறந்தமையைக் கண்டுவந்தோர்களை யாங் கண்டிலேம் ஆதலானும் என்க. பண்பு - ஈண்டு வாய்மைபண்பு குறித்து நின்றது.
    170, அறிதும் ; தன்மைப்பன்மை. அத்தோழரும் விரும்பும்படி உருமண்ணுவா கூறி. இதுகாறும் உருமண்ணுவா தோழர்க்கு இங்ஙனம் கூறுமின் என்பான் எடுத்துக் கூறிக காட்டியபடியாம்.
    171. இன்னவை - ஈண்டுக் கூறப்பட்டவற்றை. கிளந்து-கூறி.தன்பால் அத்தோழரை அழைத்துத் தழுவிக்கொண்டு என்க.