உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
          என்கூற் றினையு நுங்கூற் றாகத்
          தேன்சுவைக் கொளீஇ வேம்பின் ஊட்டும்
     175   மகாஅர்மருந் தாளரின் மறத்தகை அண்ணலை
          நகாஅர் பல்லவர் நலம்புகழ்ந் தேத்தும்
          விழுப்பம் எய்தி ஒழுக்கியல் போம்பி
          இழுக்கா தியன்ற இலாவா ணத்தயல்
          உண்டாட் டயர்தல் உறுதி உடைத்தென
     180   வண்டார் மார்பனை வலியுள் ளுறீஇ
          ஏழ்ச்சி வேண்டுஞ் சூழ்ச்சி கொடுக்கென
 
        172 - 180 ; என்கூற்றினையும்.......கொடுக்கென
 
(பொழிப்புரை) தோழரே! ஈண்டு யான் எடுத்துக் கூறிய என் மொழிகளையும் நும்முடைய மொழிகளாக மேற்கொண்டு தேன்சுவையைக் கூட்டி வேம்பினை ஊட்டாநின்ற குழந்தை மருத்துவர் போன்று வீரத்தன்மைமிக்க நந் தலைவனுக்கு இனியவாகக் கூறி 'நீ பலரானும் நகை்கப்படாமலும், நின் நலங்களையே பலரும் புகழ்ந்தேத்தும் படியும் சிறப்புற்று நினது ஒழக்கத்தை ஓம்பி அவ்வொழுக்கத்தின்றும் இழுக்காது மேலும் சிறப்புறுதற்கு இலாவாண நகரத்தின் பக்கத்தே உண்டாட்டயர்தல் நலம் ஆகும்' என்றும் எடுத்துக்கூறி அவ்வுதயணனை ஒருப்படுத்து அவன் அவ்வுண்டாட்டு விழவிற்கு எழுதலை விரும்பும் சுழ்ச்சியை அவனுக்குக் கொடுமின் என்று கூறாநிற்ப என்க,
 
(விளக்கம்) 172. யான் ஈண்டுக் கூறியவற்றை நீயிரே கூறுமாறுபோல என்பான் 'என் கூற்றினையும் நுங்கூற்றாக' என்றான்.
    173. வேம்பு - வேம்பினாலாய கைப்புடைய மருந்து, 'வேம்பினாலாய மருந்தினைத் தேன்சுவையைச் சேர்த்து இனிதாக ஊட்டும் மகார் மருந்தாளர் போல என்க. அவன் விரும்பாதவற்றையும் விரும்புவனவற்றோடு கலந்து அவன் விரும்பிக் கேட்கும்படி கூறி என்றவாறு.
    174. மகாஅர் மருந்தாளர் - குழந்தைகட்கு மருத்துவஞ் செய்யும் மருத்துவர், மறத்தகையண்ணல் ; உதயணகுமரன்; அண்ணலுக்கு என்க.
    175. பல்லவர் - .பலரும். பலரும் நாகராய், நலம்புகழ்ந் தேத்தும்படி ஒழுக்கியல் ஓம்பி விழுப்பம் எய்த என்று மாறிக் கூட்டி  எய்தி என்னும் எச்சத்தைச் செயவெனெச்சமாக்கிக்கொள்க.
    177, இயன்ற-இயற்றப்பட்ட. பலர் ஏத்தவும் ஒழுக்கியல் ஓம்பி விழுப்பம் எய்தவும் உண்டாட்டயர்தல் உறுதியுடைத்து என்று எடுத்துக் கூறி என்றவாறு. இதனால் காமவின்பத்திலும், கையறவிலும் அழுந்திக் கிடக்கும் உதயணனை அந்நிலையினின்று மீட்கும் உபாயம் கூறப்பட்டமை  உணர்க.
    179. மார்பன் ; உதயணன்.
    180. ஏழ்ச்சி - எழுச்சி. சூழ்ச்சிகொடுத்தலாவது அவ்வழியில் அவனது ஆராய்ச்சி நிகழும்படி செயதல்.