உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
          உள்ள தோழரும் ஒருப்பட் டெய்தி
          வள்ளிதழ் நறுந்தார் வத்தவற் குறுகி
          முறைபட உணர்ந்த குறைவில் கட்டுரை
     185   கொள்ளக் கூறலும் வள்ளலும் விரும்பி
          நிதியக் கலத்தொடு பதிபல அருளிக்
          கொற்ற முரசிற் கோடணை கொட்டி
          ஓசைபோக் கினரால் உவகையின் மகிழ்ந்தென்,
 
        181 - 187 ; உள்ளதோழரும்......மகிழ்ந்தென்,
 
(பொழிப்புரை) அதுகேட்ட அந்தோழரும் அது செய்தற்கு உடம்பட்டுச் சென்று உதயணகுமரனை அடைந்து முறைமையானே ஆராய்ந்துணர்ந்த குறைவில்லாத பொருள் பொதிந்த  உரைகளை அவன் உளங்கொள்ளுமாறு கூறினராக; அது கேட்ட அவ்வுதயணனும். பெரிதும் மகிழ்ந்து அவர்க்கு அணிகலன் முதலியவற்றை வழங்கினன். பின்னர், அவனது உடம்பாடு பெற்ற அத்தோழர் மிக மகிழ்ந்து வெற்றி முரசினை முழக்கி அச்செய்தியை ஊர்முழுதும் அறியும்படி செய்தனர் என்க.
 
(விளக்கம்) 181. ஒருப்பட்டு - உடம்பட்டு.
    182. பெரிய இதழ்களையுடைய நறிய மலர்மாலையினையுடைய உதயணனை என்க.
    184. வள்ளல்; உதயணகுமரன். வள்ளல் என்றது கலனும் பதியும் அருளுதற்குக் குறிப்பேதுவாய் நின்றது,
    185.நிதியக்கலம் ; இருபெயரொட்டு ; நிதியமாகிய அணிகலன் என்க. பதி - ஊர்.
    186, கொற்றமுரசின் - வெற்றி முரசத்தின்கண். கோடணை முழக்கம். ஓசை-செய்தி.


                         11. அவலந்தீர்ந்தது முற்றிற்று,