உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
         
        மாசில் கொற்றவன் மறுத்திவண் வரவும்
        ஆண்டகை மொய்ம்பினோர் அரசடிப் படுப்பதூஉம்
    160  ஈண்டிவண் வந்துநீ வீற்றிருப் பதூஉம்
        உள்ளுறுத் தோதியான் உள்ளம் உவப்ப
        முற்பா னிகழ்ந்தவும் பிற்பாற் பெருக்கமும்
        இனையவை எல்லாம் இயற்படப் பிழையாது
 
        158-164 ; மாசில்,.,,......விரிந்துரைத்தனன்
 
(பொழிப்புரை) குற்றமற்ற கொற்றவனாகிய அச் சதானிகன் மீண்டும் வைசாலி நகரத்தே வருதலையும் பிரச்சோதன மன்னன் நின்னைச் சிறைப்படுத்தலும், இச் சயந்தியின்கண் வந்து நீ இருத்தலும், உள்ளிட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் தனது ஓதிஞானத்தானே உணர்ந்து அச் சதானிக மன்னன் நெஞ்சம் உவக்கும்படி இறந்தகாலத்தே நிகழ்ந்தனவும், எதிர்காலத்தே நிகழும் நின் ஆக்கங்களையும், இன்னோரன்ன பிறவற்றையும் வாய்மையாகப் பிழை சிறிதும் இல்லாமல் வினாவிய அப்பொழுதே விரித்துக் கூறினான்' என்க.
 
(விளக்கம்) 158. கொற்றவன் ; சதானிகன். இவண - இந்நகரத்தே. 159. ஆண்மைத்தன்மை மிக்க வலியுடைய ஒப்பற்ற அரசனாகிய பிரச்சோதன மன்னன் என்க. அடிப்படுத்தல்-சிறைப்படுத்தல். 160, ஈண்டு இவண் - இச்சயந்தியின்கண், 161. உள்ளுறுத்து - உட்படுத்தி, ஓதி - முக்காலத்து நிகழ்ச்சிகளையும் உணரும் தெயவஞானம், உள்ளமுவப்ப-அச் சதானிகன் நெஞ்சம் உவக்கும்படி. 162. முற்பால்-இறந்த காலம். பிற்பால் -எதிர் காலம். பெருக்கம் -ஆக்கம். 163, இயற்பட -வய்மையாக. (150) வினவ (164) வினவிய அப்பொழுதின் என்றியைக்க.