உரை
 
2. இலாவாண காண்டம்
 
12. மாசன மகிழ்ந்தது
 
          பலவு மாவு நலமா நாகமும்
          மகிழும் பிண்டியும் வரியிதழ் அனிச்சமும்
          வேங்கையும் ஆவும் விளவும் வேயும்
     15    நறையு நந்தியும் அறைபயில் அகிலும்
          வழையும் வாழையுங் கழைவளங் கவினிய
          திகிரியுந் தில்லையும் பயில்பூம் பயினும்
          குருந்தும் வெட்சியு நரந்தையு நறவும்
     20   நறும்பா திரியு நாண்மலர்க் கொகுடியும்
          இரும்பமல் ஏலமும் ஏரில வங்கமும்
          பைங்கூ தாளமும் வெண்பூஞ் சுள்ளியும்
          கொய்தகை போந்துங் கைதகை காந்தளும்
          திமிசுந் தேக்கு ஞெமையும் ஆரமும்
     25   சேபா லிகையுஞ் செங்கொடு வேரியும்
          தீவாய்த் தோன்றியுந் திலகமுந் திரிகோற்
          பகன்றையும் பலாசும் அகன்றலைப் புழகும்
          குளவியுங் குறிஞ்சியும் வளவிய மௌவலும்
          சிறுசெங் குரலியுஞ் சிறுசெண் பகமும்
     30   நறும்பொற் கொட்டமுந் துறும்புபு கஞலி
          கொடிப்பூம் பந்த ரிடைப்பரந் தியன்ற
          இடமிடந் தோறுங் கடனது வாகித்
          தண்டாக் காதலின் உண்டாட் டுரைப்பேன்
 
           11 - 34 .. பலவும்.,.,.,..உரைப்பேன்
 
(பொழிப்புரை) அச்சாரலிலே பலா முதலிய மரங்களும், அம்மரங்களின் மிசைப்படர்ந்த பூங்கொடிப் பந்தர்களும், மிக்க இடங்கள்தோறும் அம்மாந்தர் தணியாத விருப்பத்தோடே ஆடிய உண்டாட்டு விழிவினை இனிக் கூறுவேன் கேண்மின் என்க.
 
(விளக்கம்) 11. பலவு - பலாமரம். மா - மாமரம். நலமாநாகம் - நன்மையுடைய பெரிய நாகமரம்.
    12. மகிழ் - மகிழமரம், பிண்டி - அசோகமரம்; செயலைமரம். வரிகளமைந்த இதழ்களையுடைய அனிச்ச மரம்.
    13. வேங்கை - ஒரு மரம், ஆ - ஆச்சாரம்.விளவு - விளா மரம். வேய் - மூங்கில்,
    14. கோங்கம் - கோங்கமரம். குரவு -குராமரம். குருக்கத்திக் கொடி - மாதவிக்கொடி.
    15. நறை - நறைக்கொடி, நந்தி-நந்தியாவட்டம். அறைபயில் அகில். - அறுத்தலைச் செய்யப்படும் அகில்.
    16. வழை - சுரபுன்னை. கழை - கரும்பு; ஒருவகை மூங்கிலுமாம். இனி கழைவளங் கவினிய திகிரி எனக் கொண்டு கோல்வளத்தாலே அழகுற்ற சிறுமூங்கில் எனினுமாம், கழை - கோல்.
    17. தில்லை - ஓரு மரம். பயில்பூம்பயின்-செறிந்த மலர்களை யுடைய பயின்மரம் என்க.
    18. பிடா - ஒருமரம்; பிடவஞ் செடியுமாம். குல்லை - கஞ்சங்குல்லை (கஞ்சா) துழாயுமாம். நரந்தை - நரந் தம்புல்; ஒரு மணப்புல்; நாரத்தையுமாம். - நறவு - நறாமரம்,
    20, கரிய பாதிரிமரம், நாடோறும் மலரும் கொகுடி என்க, கொகுடி - ஒருவகை முல்லை.
    21. இறும்பாகச் செறிந்த ஏலம் என்க. சிறுகாடாக மண்டிய ஆஞ்சி என்றவாறு. இறும்பு - சிறுகாடு, அமலுதல் - செறிதல். ஏர் - அழகிய. இலவங்கம் - ஒருவகை மணமுடைய மரம்.
    22. பசிய கூதளி - வெள்ளிய மலரையுடைய கூதாளஞ்செடி, சுள்ளி - மராமரம்.
    23. கொய்து அகை போந்து - கொய்துழித் தழைக்கும் இயல்புடைய இளம்பனை. கை தகை காந்தள் - மகளிர் கையை ஒத்த பூவையுடைய செங்காந்தள் என்க
    24. திமிசு - வேங்கை மரத்தில் ஒருவகை. ஞெமை - ஒருவகை மரம். ஆரம் - சந்தன மரம்.
    25. சேபாலிகை - கருநொச்சி மரம். செங்கொடு வேரி - இஃது இக்காலத்தே கொடிவேலி என்று வழங்கப்படுவதுபோலும்,
    26, தீப்போல மலரும் தோன்றி என்க. தோன்றி - ஒருவகைக் காந்தள். திலகம் - மஞ்சாடிமரம்.
    26-27. திரிந்த (முறுக்குடைய) கோலையுடைய பகன்றைக்கொடி. பலாசு - புரசு - புழகு - புனமுருங்கை; மலை எருக்குமாம்.
    28. குளவி - காட்டுமல்லிகை. குறிஞ்சி - ஒரு வகை மரம், வளவிய மௌவல் - வளப்பமுடைய முல்லை; ஒருவகை மல்லிகையுமாம்.
    29, சிறுசெங்குரலி - கருந்தாமக்கொடி,
    30, நறியனவும் பொன்னிறமுடையனவுமாகிய மலர்களைபுடைய கொட்டமரமும் என்க, துறும்புபு கஞலி-மிக நெருங்கி ; ஒருபொருட் பன்மொழி,
    31. இவைபோன்ற பிற மரங்களும் (செடி கொடிகளும்) செறியப்பட்டு அவற்றின் மிசைப்படர்ந்த பூங்கொடிகளா னாய பந்தரின் கீழ்ப் பரந்தியன்ற இடந்தோறும் என்க.
    33. இடவிடம்தோறும் - இடந்தோதும் இடந்தோறும், கடன் அதுவாக எனச் செயவெனெச்சமாக்கிக் கொள்க. கடமை அஃதாகலான் உண்டாட்டு உரைப்பேன் என்பது கருத்தாகக்கொள்க. (1-34) (38) மகளிரும் மைந்தரும் நகர் வறுவிதாக நாட் கொண்டு (10) கூடி (33) இடமிடந்தோறும் (ஆடிய) உண்டாட்டினை  உரைப்பேன் என இயைக்க,
    34. தண்டாக் காதலின் (ஆடிய) உண்டாட்டென்க. தண்டா அமையாத.