உரை
 
2. இலாவாண காண்டம்
 
12. மாசன மகிழ்ந்தது
 
           மாசில் வானத்து மதிவிரிந் தன்ன
           தூசக் குடிஞையுந் துலாமண் டபமும்
           பல்காழ்த் திரையும் படாகையுங் கொட்டிலும்
     45    ஒல்காக் கூடமும் ஒருங்குதலைப் பிணங்கி
           மன்றும் வீதியுந் துன்றிவீ றெய்தி
           எல்விடந் தோறும் அவ்விடத் தாகி
           உயர்மிசை யுலக நீங்கி நிலமிசை
           அந்தர மருங்கி னந்தன வனத்தொ
     50    டிந்திரன் உரிமையொ டெண்கொண் டிறங்கின
           இன்பம் பயந்த இலாவா ணத்தயல்
           மன்பெருஞ் சோலை மலைவயிற் போகா
 
        42 -52 ; மாசில்...............மலைவயிற்போகா
 
(பொழிப்புரை) அச்சாரலின்கண் எவ்விடங்களினும் அவ்வவ்விடத்தேயும் தூசக் குடிஞையும், துலாமன்டபமும், மதில்  திரையும், படாகைக் கொட்டிலும், கூடமும் ஒருங்குசேர இயற்றப்பட்டு,.அம்பலங்களும் வீதிகளும் செறிந்து பேரழகு பொருந்தியதும் இலாவாண நகரின். பக்கத்துள்ள துமாகிய பெரியதொரு  சோலையையுடைய மலையிடத்தே சென்று என்க.
 
(விளக்கம்) 42. குற்றமற்ற விண்ணிடத்துத் திங்களினது நிலாவொளி பரந்தாற் போன்ற வெள்ளிய ஒளியையுடைய குடிஞை முதலியன என்க. மதி ; ஆகுபெயர்.
    43, தூசக்குடிஞை-வெள்ளிய, ஆடையால் இயற்றிய பாடி வீடு, துலாமண்டபம்-துலாம் என்னும் உறுப்புடையதாய் இயற்றுவ தொரு மண்டபம் என்க.''கதவை அணுகாதபடி கற்கவி தொடங்கி நாற்றும் துலாம்'' என்பர் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் ''பற்றாக்கை தூக்கிப் போகட்ட விட்டம்'' என்பர் அடியார்க்கு நல்லவர். (சிலப்.15-213.உரை)இனி இந் நூலின்கண் உஞ்சைக் காண்டத்து இவ்வாசிரியரே ''துகிர்த் துலாமண்டபம்'' என்பது முணர்க.
    44. பல்காழ்த்திரை பல குத்துக்கோல்களுடனே செய்பப்பட்ட மதிட்டிரையை வளைத்தியற்றியதொரு வீடென்க. படாகைக் கொட்டில் -  பெருங்கொடி நடப்பட்ட கொட்டில். 45. ஒல்காக் கூடம் -மெலியாத கூடம் என்னும் உறுப்புடைய குடில் என்க. ''கூடங்குத்திக் கயிறு வாங்கிருக்கை'' என்றார் முல்லைப் பாட்டினும் (40).
    46. மன்று-அம்பலம்.குடிஞை முதலியன பிணங்கி மன்றும் வீதியும் செறிதலானே வீறு எய்திய இடந்தோறும் என்க.
    48-50. இந்திரன் தன் உயர்மிசை யுலகம். நீங்கித் .தன் நந்தனவனத்தோடும் தன் உரிமை மகளிரோடும் நிலமிசை(வந்து) இறங்கினாற்போன்ற மன்பெருஞ்சோலை என மாறிக்கூட்டுக. உயர்மிசையுலகம் - வானுலகம். அந்தரமருங்கின்-அவ்வானத் தின்கண் உள்ள. நந்தனவனம்-இளமரக்கா; என்றது,கற்பகச் சோலையை. உரிமை-மனைவி. இந்திரன் உதயணனுக்கும் உரிமையாகிய இந்திராணி வாசவதத்தைக்கும் நந்நனவனம், அவர்கள் சென்றுறையும் சோலைக்கும் உவமைகள். இறங்கினாற் போன்ற என்க.
    51.இலாவாணத்தயல் இன்பம்பயந்த மன்பெருஞ்சோலை என மாறுக 
    52. போகா - போய்.