உரை
 
2. இலாவாண காண்டம்
 
12. மாசன மகிழ்ந்தது
 
            பூந்தண் சாரல் பொங்குகுலை யெடுத்த
            காந்தட் கொழுமுகை கண்ட மகளிர்நம்
            கைவிரல் எழினலங் கவர்ந்தன இவையெனக்
     70     கொய்பூங் காந்தள் கொண்ட கையினர்
            எமக்கணி உடையர்என் றெம்மொ டுறையுநீர்
            நுமக்கணி யுடையரை எதிர்ந்தனிர் ஈங்கென
            எழில்விரல் தோறும் இயைந்தணி யாகிய
            கழுமணி மோதிரங் கழித்தனர் களைந்து
     75     கவற்சி கொண்ட காமத் துணைவியர்
            இயற்கை ஓரின் இற்றென மதித்துக்
            காலக் காந்தள் கதழ்விடங் காட்டிக்
            கோலக் கொழுவிரல் ஏலொளி எறிப்ப
            அரும்பென நில்லா அஞ்சின அளிய
     80     விரிந்த இவற்றொடு விடுமின் வேர்வென்
            றிரந்தனர் தெருட்டி இயைந்தனர் ஒருசார்
 
        67 - 81 ; பூந்தண்சாரல்........இயைந்தனரொருசார்
 
(பொழிப்புரை) அம்மலைச் சாரலிலே மற்றொரு பக்கத்திலே காந்தளினது கொழுவிய அரும்புகளைக் கண்ட சில மகளிர் அவற்றைக் கொய்து தங்கையிலே கொண்டு நோக்கி இவை நம் கைவிரல்களின் அழகினது நலத்தை அழித்தன என்று அவற்றைப் பகைத்துத் தம் விரல்களிற் செறித்த மோதிரங்களை நோக்கி ''நீர் எமக்கு அழகு செய்வாரைப்போன்று எம்மோடுவாளா உறைகின்றீர்! இப்பொழுது நுமக்கும் அழகு செய்தலுடையாரை நீயிரே கண்டீர்! ஆதலின் நீயிர் ஒழிக,'' என்று அவற்றைக் களைந்து கழித்துப் பின்னரும் கவலாநின்றனராக அக் காமக்கிழத்தியரின் தன்மைகண்ட தலைவர் இம்மகளிரின் பேதைமையை ஆராயின் இத்தன்மைத்தேயாம் என்று நகைத்து அவர்தம் கவலையை அகற்றக் கருதி அவர்க்குப்பருவத்தாலே மலரும் காந்தண் மலரைக் காட்டி ''இவற்றைக் காண்மின்! இவை நும் விரல்கள் வீசிய ஒளியாலே தம் அரும்பு நிலையிலேயே நிற்கமாட்டாதனவாய் அஞ்சி விரிந்தன.ஆதலால் இவை அளியன! இவ்வெளிய காந்தட் பூக்களை சினத்தல் தவிர்மின்!'' என்று அவர்களைத் தெளிவித்து இரந்து அவரொடு கூடி ஆடாநின்றனர் என்க.
 
(விளக்கம்) 67. பூந்தண்சாாரல்-அழகிய குளிர்ந்த மலைச்சாரல். பொங்கு குலை - மிக்க பூங்கொத்து; பரிய பூங்கொத்துமாம்.

    68 கொழுமுகை - கொழுத்த(பருத்த)அரும்பு.
    69, எழில்நலம்-அழகினது நன்மை, இவை-இவ்வரும்புகள்.
    70  கொய்த பூவாகிய காந்தட்பூ என்க.
    71 -72 இவை அம்மகளிர் தம்மோதிரத்தை முன்னிலைப்படுத்துக் கூறுவன, எமக்கு அழகு செய்தல் உடையீர் போல வாளா எம்மோடு உறையாநின்ற நீர் என்பது கருத்து,
    72, இப்பொழுது நுமக்கும் அணி செய்தல் உடையரைத் தலைப் பட்டீர் ஆதவின் ஒழிக என்று கூறிக் களைந்து கழித்தனராய் என்க.
    74. கழுமணி-கழுவிய மணி; அராவப்பட்ட மணி என்றவாறு.
    75. அப் பூக்களுக்குத் தங் கைவிரலழகு, தோற்றமைக்குக் கவற்சி கொண்ட என்க .கவற்சி-கவலை. காமத்துணைவியர்-காமக் கிழத்தியர்
    76, இம் மகளிரின் இயல்பினை ஆராயின் இத்தகைய பேதைமைத்தே ஆகும் என்று கருதித்தம்முள் நக்கென்க;என்னை ? பிறர் பேதைமை காண்டல் நகைக்கிடமாதலின்.
    77. காலக்காந்தள் - செவ்வியுடைய காந்தள் மலர் .கதழ்விடம - மலர்ந்துள்ள இடம்.
    78. கோலக் கொழுவிரல்-அழகிய கொழுவிய நும் விரல் என்க, ஏல் ஒளி - எழுச்சியையுடைய ஒளி .
    79. நுங்கைவிரல் எழில் அழிப்பதாகிய அரும்பாந்தன்மையிலே நிலைத்து நிற்றல் ஆற்றாது,அஞ்சி விரிந்தன என்க.கோட்டுப் பூ ஒளி கண்டு மலரும் இயல்புடையன ஆதல் அறிக.   அஞ்சின ஆதலால்; அளிய என்க அளிய - இரங்கத் தக்கன 
    80. வேர்வு - சினம் ; ஆகுபெயர். ''பொள்ளென ஆங்கே புறம் வேரார் (குறள்-487) என்புழிப்போல    
    81. இரந்தனர் ; முற்றெச்சம். தெருட்டி-தெருளச் செய்து.