உரை
 
2. இலாவாண காண்டம்
 
12. மாசன மகிழ்ந்தது
 
           தேங்கமழ் சிலம்பிற் பாங்குபட நிவந்த
           வேங்கை விரியிணர் விரும்புபு கொய்து
           புணர்வெங் காதலர் புனையிருங் கூந்தற்
     85    கிணரிவை.அணிமினென் றிரந்தனர் நீட்ட
           விரும்பினர் கொண்டு வீயென வுணரார்
           அரும்பிள வனமுலை ஆகத் தருகர்ச்
           சிதர்வன கிடந்த சில்லரித் சுணங்கிவை
           புதல்வர்ப் பயப்பிற் புலந்துகை நீங்கி
     90    மலையக மருங்கின் மரம்பொருந் தினவெனச்
           சிலையணி அழித்த சென்றேந்து புருவத்
           தரிமலர் நெடுங்கண் அழலெழ நோக்கித்
           தெரிவை மகளிர் திண்பார் வீசிட
 
              82 -93 ; தேங்கமழ்..,..,.,வீசிட
 
(பொழிப்புரை) ஒருசார் தேன் மணங்கமழாநின்ற மலைப்பக்கத்தே உயர்ந்து நின்ற வேங்கை மரங்களினது மலர்ந்த பூங் கொத்துக்களைச் சில மைந்தர் தங் காதன் மகளிர் கரிய கூந்தற்கு இவை நன்கு பொருந்துவன என்று கருதி அவற்றை விரும்பிக் கொய்து கொணர்ந்து ''.இவற்றை நீயிர் அணிமின்'' என்று பணிமொழி கூறிக்கொடுப்ப அம்மகளிரும் அவற்றை விரும்பி ஏற்றுக்கொண்டு அவை வேங்கை மலர்களே என்பதுணராராய் இவை நமது மார்பகத்தின் .முலையினருகே சிதறிக்கிடந்த  சுணங்குகளே; யாம் மகப்பெற்றமையாலே இவை நம்மை வெறுத்துநீங்கி இம்மலைச்சாரலிடத்துள்ள மரத்தைப் பொருந்தின என்று கருதித் தங்கண்களில் தீயெழ அவற்றைச் சினந்து நோக்கி நிலத்தின்கண் வீசாநிற்ப என்க.
 
(விளக்கம்) 82. தேம் - தேன். சிலம்பு - மலை. பாங்குபட - அழகுண்டாக; பக்கத்தே எனினுமாம்.
    83. நிவந்த - உயர்ந்து வளர்ந்த, வேங்கை - ஒருவகை மரம் விரியினர் - மலர்ந்த பூங்கொத்து. விரும்புபு - விரும்பி.
    84. புணர் - வெங்காதலர் - புணர்தற்கும் விரும்புதற்கும் காரணமான காதலையுடைய மகளிர் என்க. புனை இருகூந்தற்கு -ஒப்பனை செய்யப்பட்ட கரிய கூந்தலுக்கு.
    85. இவை பொருத்தமான இணர் என்று கருதி என்க. இரந்தனர்; முற்றெச்சம். நீட்ட-கொடுப்ப,
    86. அம்மகளிர் ''விரும்பி அவற்றை ஏற்றுக் கொண்டென்க. விரும்பினர்; முற்றெச்சம் ; வீ - மலர்.
    87, ஆகத்து அரும்பு இளமுலைஅருகர் என மாறுக. அருகர் - பக்கத்தே,
    88, சிதர்வன கிடந்த - சிதர்ந்து கிடந்த, சில் அரிச்சுணங்கு - சிலவாகிய கோடுகளையுடைய தேமல்.
    89, புதல்வர்ப் பயப்பின் - யாம் மகப் பெற்றமையானே. புலந்து . வருந்தி; ஈண்டு வெறுத்து என்பது பட நின்றது.
    91. வில்லினது அழகை அழித்தனவும் நீண்டு உயர்ந்தனவுமாகிய புருவத்து என்க.
    92,. அரிமலர் நெடுங்கண் - செவ்வரி கருவரிகள் படர்ந்த தாமரை மலரை ஒத்த அழகிய நெடிய கண் என்க, அழலெழ -  தீயெழ.
    93. தெரிவை மகளிர் - தெரிவைப் பருவமெய்திய மகளிர். அஃதாவது இருபத்தாறாண்டகவை முதலாக முப்பத் தோராண்டகவை ஈறாக இவற்றுட்பட்ட அகவை என்க. திண்பார்-திண்ணிய நிலத்தில்