உரை
 
2. இலாவாண காண்டம்
 
12. மாசன மகிழ்ந்தது
 
           மாலை யோதி மடவரன் மகளிர்க்குக்
     95    காலை கழியினுங் கழியா திதுவென
           வந்த உள்ளமொடு நயந்நுபா ராட்டி
           அன்மையை உணர்த்த வண்மையிற் றாழ்ந்து
           வீழ்பூங் கொம்பின் வேங்கை நிரந்த
           ஆய்பூங் கானத் தாடினர் ஒருசார்
 
        94-99; மாலையோதி.......ஆடினரொருசார்
 
(பொழிப்புரை) அதுகண்ட அம்மைந்தர் மகளிர்க்குப் பருவம் பல கழிந்தவிடத்தும் இப்பேதைமை மட்டும் கழிவதில்லை என்று கருதித் தம்முள் உவந்து அம் மகளிரைப் பாராட்டி அவை சுணங்கன்மையை ஏதுக்காட்டி உணர்த்த அம்மகளிரும் தமக்கியல்பாக வமைந்த அளியுடைமையாலே சினந்தணிந்து, பூத்த கொம்புகளையுடைய அவ்வேங்கை மரங்கள் நிரல்பட்டு நின்ற அப் பூஞ்சோலையிலே அம் மைந்ததோடே ஆடாநின்றனர் என்க.
 
(விளக்கம்) 93. மாலை ஒதி மடவரல் மகளிர்க்கு-மலர் மாலையணிந்த கூந்தலையும் மடப்பம் வருதலையும் உடைய மகளிர்க்கு என்க,
    95 காலை-காலம் ஈண்டு இளமைப் பருவம் என்பதுபட நின்றது, பேதைமைக்குரிய இளம் பருவம் கழியினும் மகளிர்க்கு பேதைமை மட்டும் கழிவதில்லை என்பது கருத்து. இது-இப்பேதைமை,
    97, அன்மையை-அவை சுணங்கல்லாமையை, வண்மை-வள்ளற்றன்மை, தாழ்ந்து -சினந்தணிந்து,
    98. வீழ்பூ - விரும்புதற்குக் காரனமான மலர்.