உரை
 
2. இலாவாண காண்டம்
 
12. மாசன மகிழ்ந்தது
 
           நாக நறுமர நவியத்திற் றுணித்து
           வேக வெல்வழல் விளிய மாட்டி
           மான்நிணப் புழுக்கலொடு தேனெய் விதவையின்
           பன்முறை பகர்ந்து தொன்முறை பிழையார்
     115    நன்னாட் கொண்டு தன்னையர் பரியப்
           பொன்னேர் சிறுதினை விளைந்த புனந்தொறும்
           சாயலுங் கிளவியுந் தம்மொடு நிகர்த்த
           தோகையுங் கிளியுந் தொக்கவை அகலத்
           துறுகல் வேயின் குறைகண் டன்ன
     120    தடந்தோள் அசையத் தட்டை புடைத்து
           முடந்தாட் பலவின் முன்றில் நின்ற
           கானவர் மகளிர் காரிகை நோக்கி
           வானவர் மகளிர் அல்லர் ஆயின்
           வளமலைச் சாரல் வைமிசை யுறையும்
     125    இளநல மகளிர் இவரென எண்ணி
 
        111 - 125 ; நாகநறுமரம்,,.,,,,,,அஞ்சினரொருசார்
 
(பொழிப்புரை) ஒருசார் நாகமாகிய நறிய மணமுடைய மரங்களைக் கோடரியாலே துணித்து அவற்றின்கண் தீக்கொளுவி அத்தீயினாலே சமைக்கப்பட்ட மான் நிணங்கலந்த ஊனைத்தேன்கலந்த பாற்சோற்றோடு தமது பழைய முறைமையில் தப்பாது கடவுளுக்கு மடையாகக் கொடுத்துப் பலமுறை வாழ்த்தித் தமையன்மார் வினைமேற் செல்லா நிற்பப் பொன்னிறமுடைய சிறிய தினைகள் விளைந்து முதிர்ந்த தத்தங் கொல்லைகள் தோறும் மென்மையானும் சொல்லானும் தம்மை நிகர்த்த மயில்களும் கிளிகளும் ஆகிய பறவைகள் அத்தினையைத் தின்னவந்தவை அகன்று போம்படி மூங்கிலை ஒத்த தம் பெரிய தோள்கள் அசையத் தட்டை என்னும் கருவியைப் புடைத்து முடம் பட்ட அடிப் பகுதியையுடைய பலாமரத்தினையுடைய தம் முற்றத்திலே நின்ற குறமகளிரின் அழகை நோக்கி இம் மகளிர் வானவர் மகளிர் போலும்; அவர் அல்லரெனின் வளவிய மலைச்சாரலிலே அம்மலையுச்சியினிலே உறைவோர் என யாம் கேள்வியுற்ற வரையர மகளிரே ஆதல் வேண்டும் என்று கருதிச் சிலமகளிர் அஞ்சாநின்றனர் என்க.
 
(விளக்கம்) 111. நாகம் என்னும் பெயரையுடைய நறுமணமுடைய - மரம் என்க, நவியம்-கோடரி,
    112, வேகவெவ்வழல் - சினமுடைய. வெவ்விய நெருப்பு. விளிய - அம்மரங்கள் வேகும்படி. மாட்டி - கொளுவி.
    113. அத்தீயிற் சமைத்த புழுக்கல,் என்க. தேனெய் ; பண்புத்தொகை. விதவை-பாற்சோறு.
    114. பகர்ந்தும் -வாழ்த்தி; கடவுளை வாழ்த்தி என்க. தொன்  முறை - பழைய வழக்கம்   
    115. நன்னாள் - நல்ல முழுத்தம். தன்னையர் - தமையன்மார். பரிய-வினைமேற் செல்ல என்க
    116. பொன்போன்ற நிறமுடையதினை என்க.புனம்-கொல்லை.
    117. சாயல் -மென்மை. கிளவி-மொழி.
    117-118, சாயலாற் றம்மை ஒத்த தோகையும், கிளவியாற்றம்மை ஒத்த கிளியும் என்க தோகை - மயில்; ஆகுபெயர், தொக்கவை-வந்து கூடியவை.
    119, துறுகல் -குண்டுக்கல். துறுகல்லிடத்தே வளர்ந்த வேய் என்க வேய் - மூங்கில். குறை-துணுக்கு.
    120, தடந்தோள் - பெரிய தோள், தட்டை -கிளிகடிகருவி.
    121, முடம்பட்ட அடியினையுடைய பலாமரம் நிற்கும் தம் குடிலின்
  முற்றத்தே என்க.
    122. கானவர் மகளிர்- குறவர் மகளிர். காரிகை-அழகு.
    123, வானவர் மகளிர் ஆதல் வேண்டும்; அவர் அல்லராயின்  என்க.
    125. என்றும் இளநலத்தோடிருக்கும் வரையர மகளிர் ஆதல் வேண்டும் என்று கருதி என்க. வரையரமகளிர் தீண்டி வருத்து மியல்பினராதலின் அஞ்சினர் என்பது கருத்து
    126. அஞ்சில் ஓதியர்-அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மகளிர்