உரை
 
2. இலாவாண காண்டம்
 
13. குறிக்கோள் கேட்டது
 
         
     50   பசுமரஞ் சார்ந்தனை ஆதலின் மற்றுநின்
          உசிர்ப்பெருந் தோழன் உண்மையுங் கூட்டமும்,
          கண்ணகன் றுறைந்த கடிநாள் அமையத்துத்
          திண்ணி தாகுந் தெளிந்தனை யாகுமதி
          விரும்பிநீ பிடித்த வெண்மலர் வீழ்ச்சி
     55   பொருந்திநீ அளக்கும் பொருவில் போகத்
          திடையூ றுண்மை முடியத் தோன்றும்
 
        ( 50 - 71 முனிவர் நிமித்தம் கூறுதல் )
            50 - 56 ; பசுமரம்.....தோன்றும்
 
(பொழிப்புரை) வேந்தனே! நீ பசிய மரத்தினைச் சார்ந்திருக்கின்றனை ஆதலான், நின் உயிர் நண்பன் உயிருடன் இருத்தலும், அந் நண்பன் நெடிதுநாள் நின்னைப் பிரிந்துறைவானாயினும் ஒருகாலத்தே நின்னைக் கூடுதல் ஒருதலையே ஆகும்;  இவற்றைத் தெளிந்து கொள்வாயாக ! இனி நீ விரும்பி நினது கையிற் பிடித்திருந்த வெள்ளிய மலர் நின்கையினின்றும் நழுவி  வீழ்ந்தமையான் நீ இப்பொழுது நுகராநின்ற ஒப்பற்ற காமநுகர்ச்சிக்கு இடையூறு உண்டாகும் என்பது நன்கு விளங்கும்  (என்றார்) என்க.
 
(விளக்கம்) 50 - 51. பசுமரம் என்றது,, உயிருடைய மரத்தை. நீ உயிர் மரத்தைச் சார்ந்திருந்து நிமித்தம் கேட்டலான் நின் தோழன் உயிருடன் இருக்கின்றான் என்பது உணரப்படும் என்பது கருத்து.
    51, உசிர் - உயிர் என்பதன் திரிபு, உயிர்போன்ற சிறந்த நண்பன் என்க. அவனாவான் யூகி. எனவே அவன் மனத்தகத்தே யூகியை நினைந்து வருந்துதலையும் அம்முனிவர் உணர்ந்து கொண்டமை விளங்கும், உண்மையும் - உயிருடன் இருத்தலும் என்க. கூட்டம் - அவனோடு கூடும் கூட்டமும் என்க,
    52., கண் அகன்று உறைந்த கடிநாள் அமையத்து - நீயிர் இடத்தால் அகன்று உறையா நின்று கழிக்கும் எதிர்காலத்தே ஓரமையத்து என்க, கடி.நாள்; வினைத்தொகை. கடியும் நாள் என விரிக்க. கடிதல்-கழித்தல்.
    53. தெளிந்தனையாகுமதி என்புழி: மதி, முன்னிலை அசைச்சொல்.    
    55. பொருந்தி - நெஞ்சம் பொருந்தி என்க. அளக்கும் - நுகரா நின்ற. போகம் - ஈண்டுக் காம நுகர்ச்சி,
    56. முடிய - முற்ற; நன்கு என்றவாறு.