|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 14. உண்டாட்டு |  |  |  | ஆடுதல் 
      ஆனா அளப்பினன்ஆகி நாடுதலை 
      மணந்த நன்னகர் நினையான்
 மாயோன் மார்பின் மன்னுபு 
      கிடந்த
 ஆரம்போல 
      அணிபெறத் தோன்றிப்
 5    பசும்பொன் தாதொடு 
      பன்மணி வரன்றி
 அசும்புசோர் அருவரை அகலம் பொருந்தி
 ஞால மாந்தரை நாணி யன்ன
 நடுங்குசெலற் கான்யாற்றுக் கடும்புனல் ஆடி
 |  |  |  | 1 
      - 8 : ஆடுதல்...,..கடும்புனலாடி |  |  |  | (பொழிப்புரை)  இங்ஙனமாக 
      உதயணகுமரன் வாசவதத்தையோடு விளையாடி இன்ப நுகர்தற்கண் மிக்க 
      பற்றுடையனாகி, நன்னாடு சூழ்ந்த தன் தலைநகரைப் பகைமன்னன் பற்றி 
      ஆளுதலையும்,, கருதாதவனாகி அக்காட்டின்கண், திருமால் மார்பிற் கிடக்கும் 
      முத்தாரம் போன்ற அருவி வீழாநின்ற மலையிட.த்தைச் சேர்ந்து ஆடியும், 
      கான்யாற்று நீரின்கண் ஆடியும் என்க. |  |  |  | (விளக்கம்)  1.. 
      ஆடுதல் - வாசவதத்தையோடு,.கூடி ஆடுதலின் கண். ஆனா அளப்பு - நுகர்ந்தமையாத 
      இன்ப நுகர்ச்சி. 2. ''நல்நாடு'' என்பது வளப்பமுடைய நன்னாடு 
      என்பதுபட நின்றது. தலைநகர் நினையான் என்றது தன் நகரமாகிய கோசம்பியை 
      மாற்றான் ஆள்வதனையும் நினையான் என்பதுபடநின்றது.தலைநகரும் எனற்பாலதான 
      சிறப்பும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது.
 3, திருமால்  மார்பிடத்தே கிடக்கும்ஆரம்போன்ற அருவி வீழா நின்ற
      ஏறுதற்கரிய மலையிடத்தே என்க. மலை, மாயோனுக்கும், அருவி, ஆரத்திற்கும் 
      உவமை.
 'மாயோன் மார்பின் ஆரம்போல மணிவரை இழிதரும் 
      அணிகிளர்
 அருவி' (தொல்-செய். 35,78. 
      பேரா.மேற்) என்றும், ' நெடியோன் மார்பில் ஆரம்போன்ற பெருமலை 
      விலங்கிய பேரியாறு' (சிலப். 25; 21-2) என்றும் பிற சான்றோரும் 
      ஓதுதல் உணர்க மன்னுபு - நிலைபெற்று.
 4, ஆரம் - 
      கௌத்துவ மணிமாலை; முத்துமாலையுமாம். அணிபெற - 
      அழகுண்டாக.
 5 - 6. பசிய பொன்துகளோடு பலவேறு மணிகளையும் 
      வரன்றிவரும் அசும்பு வீழ்கின்ற ஏறுதற்கரிய மலையிடத்தே என்க. அசும்பு - 
      நீரூற்று; ஈண்டு அருவி என்க. அகலம், என்பது வாளா இடம் என்னும் 
      பொருட்டாய் நின்றது,
 7. தன்போல நல்லொழுக்கமுடையரன்மையின் உலகத்து 
      மக்களூடே செல்லுதலை நாணி நடுங்கிக் கானிடத்தே ஒழுகும் யாற்றினது விரைந்த.
      செலவினையுடைய நீரிலே ஆடியும், என்க. ஞாலம் - உலகம்.
      நாணினாற் போல, என்க.
 8. கான்யாற்று - காட்டியாற்றின், 
      கடும்புனல் - விரைந்தோடு நீர் என்க. ஆடியும் என உம்மை 
      கொடுத்துரைக்க.
 | 
 |