உரை
 
2. இலாவாண காண்டம்
 
14. உண்டாட்டு
 
          மணிநிழற் பாறை மரங்கிற் பல்கி
     10   அணிகலப் பேழை அகந்திறந் தன்ன
          நறுமலர் அணிந்த குறுவாய்க் குண்டுசுனை
          நீணீர் முழவின் பாணியிற் பாடியும்
          குழையர் கோதையர் இழையர் ஏரிணர்த்
          தழையர் தாரினர் உழைவயிற் பிரியார்
     15   பல்வகை மகளிரொடு செல்வஞ் சிறந்தும்
 
        9 - 15 ; மணிநிழல்......சிறந்தும்
 
(பொழிப்புரை) நீலமணிபோன்று ஒளிரும் பாறை நிலத்தின் கண் அணிகலப் பேழையைத் திறந்தாற் போன்று தோன்றும் நறிய மலர்கள் அழகுசெய்த குறிய வாயையுடைய ஆழ்ந்த சுனைகளிடத்தே பெருகிப் பொங்கி வீழாநின்ற அருவியாகிய மத்தள முழக்கத்தி்ன் தாளத்திற்குப் பொருந்தப் பாடியும், குழையணிந்தவராய்க் கோதையை அணிந்தவராய், அணிகலன்களை அணிந்தவராய்க் தழையுடையினை உடுத்தவராய் மலர் மாலைகளை அணிந்தவராய்த் தம்முட் பிரியாதவருமாகிய பல  வகை மகளிரோடும் கூடி ஆடி இன்பத்தாற் சிறப்புற்றும் என்க,
 
(விளக்கம்) 9. மணிநிழற் பாறை - நீலமணிபோல ஒளிவிடும் பாறை என்க. நிழல் மணிப்பாறை என மாறி ஒளியுடைய மாணிக்கப் பாறைகளிடத்தே எனினுமாம்.
    10. அணிகலப்பேழை - அணிகலன் வைத்த பெட்டி. அணிகலப்பேழையின் அகத்தைத் திறந்து கண்டாலன்ன என்பது கருத்து.
    11. குறுவாய்-குறுகியவாய். குண்டுசுனை, ஆழமான சுனை. குண்டுசுனையின்கட் பல்கி நீள் நீர்  முழவினது எனக் கூட்டிக் கூறுக. பல்கி-பெருகி பொங்கி வீழாநின்ற அருவி நீர் ஆகிய மத்தள முழக்கத்தின் தாளத்திற்குப் பொருந்த என்க. முழவு- மத்தளம். பாணி- தாளம்.     
    13 - 14. குழை - காதணி. கோதை-ஒருவகை மாலை; ஏர் இணர்த்தழையர் - அழகிய பூங்கொத்துக்களாலும் தழையாலும் இயற்றிய ஆடையினை உடையர் என்க. தார் - ஒருவகை மாலை. தம்முழைவயிற் பிரியாதவராகிய என்க. தம்மிடத்தினின்றும் பிரியாதவராகிய என்பது கருத்து.
    15. செல்வம் - இன்பம்.