உரை
 
2. இலாவாண காண்டம்
 
14. உண்டாட்டு
 
         கானுறை மகளிரிற் கவின்பெறத் தோன்றித்
        தேனுறை சிலம்பின் தானந் தோறும்
        விரவுமலர்க் கோதையர் வேறுவே றியலிக்
        குரவம் பாவைகொண் டோலுறுத் தாடியும்
   20   விரிந்துவேய் உடைத்த வெண்கதிர் முத்தம்
        தெரிந்துவே றமைத்துச் சிற்றில் இழைத்தும்
        பூங்கட் பாவைக்குப் பொற்கலம் இவையெனத்
        தேங்கட் சாரல் திருந்துசினை மலர்ந்த
        கோங்கந் தட்டம் வாங்கினர் வைத்தும்
   25   செப்படர் அன்ன செங்குழைப் பிண்டிக்
        கப்புடைக் கவிசினை நற்புடை நான்ற
        தழைக்கயிற் றூசல் விருப்பிற் றூக்கியும்
 
        16 - 27 ; கானுறை......தூக்கியும
 
(பொழிப்புரை) (53) அவ்வரண்மனை மகளிர் தம்மிடத்தினின்றும் பிரிந்து சென்று, அக்காட்டகத்தே வாழும் குறவர் மகளிரைப்போல அம்மலையிடத்தே வேறு வேறு இடங்களிற் சென்று அவ்வவ் விடங்களிலே குரவம் பூவாகிய பாவையினை  மகவாகக் கையிலேந்தித் தாலாட்டியும், மூங்கிலினின்றும் உதிர்ந்த முத்துக்களாலே சிற்றிலிழைத்தும், பொன்னிறமுடைய கோங்க மலர்களைக் கொய்து இவை எம் பாவைக்கு ஏற்ற பொன்னணிகலமாம் என்று அப்பாவைக்கு அணிந்தும், அசோகினது கவர்த்துக் கவிந்த கிளைகளிலே தாழங்கயிற்றாலே  இயற்றப்பட்ட   ஊசல்களிலே விரும்பி ஒருவர் ஒருவரை ஏற்றி ஆட்டியும் என்க.
 
(விளக்கம்) (53) கோயின் மகளிர் என்பதனை எழுவாயாகக் கொள்க, 17. விரவு மலர்க்கோதையர் கானுறை மகளிரின் தோன்றி என மாறுக. என்றது அவ்வரண்மனை மகளிர் கானவர் மகளிர் போல உள்வரிக் கோலங் (வேடம்) கொண்டு என்றவாறு.
    16, கான்உறை மகளிர் - குறிஞ்சித்திணை மகளிர். கவின்பெற - அழகுண்டாக.    
    17. தேன் உறை சிலம்பு - தேத்திறால் பொருந்திய மலை - தானம் இடம்.
    18. இயலி - சென்று.
    19. குரவம்பாவை - குராஅமலர். இம்மலரைப் பாவை என்றுவழங்குதல் மரபு ; இதனை, 'நறும்பூங்குரவம் பயந்த செய்யாப் பாவை' (244.) எனவரும் ஐங்குறு நூற்றினும், பிற சங்க நூல்களகத்துங் காணலாம். ஓலுறுத்துதல் - தாலாட்டுதல்.
    20. வேயை,வேய்-மூங்கில்; இதன்கண் முத்துப் பிறத்தலுண்டென்ப,
    21. தெரிந்து - ஆராய்ந்து. சிற்றில் - விளையாடுதற் பொருட்டுச் சிறார் இழைக்கும்  வீடு.
    22. பூப்போன்ற கண்ணையுடைய பாவைக்கு, பொற்கலம் - பொன்னாலியற்றிய அணிகலம்,    
    24, கோங்கந் தட்டம் - கோங்கமலர். இது தட்டம் போறலின் தட்டம் எனப்பட்டது. வாங்கினர்; முற்றெச்சம். வாங்குதல் - பறித்தல்.
    25 செப்புத் தகடு போன்ற சிவந்த தளிரையுடைய அசோகம் என்க.
    26. கப்பு - கவை. கவிசினை; வினைத்தொகை; கவிழ்ந்தகிளை, நற்புடை - நன்றாகிய பக்கத்தில்,
    26 - 27. தூங்குகின்ற தாழையின் வீழ்தாலாகிய கயிறு என்க. தாழை; தழை என முதல் குறுகியது தூக்கியும் - தூங்கவிட்டு (ஆடியும் என்க,)