உரை
 
2. இலாவாண காண்டம்
 
14. உண்டாட்டு
 
          பேறருங் கற்பிற் பிரச்சோ தனன்மகள்
          மாறடு வேற்கண் வாசவ தத்தை
          செல்வமுஞ் சிறப்பும் பல்லூழ் பாடிக்
     40   குராஅ நீழற் கோல்வளை ஒலிப்ப
          மார அங் குரவை மகிழ்ந்தனர் மறலியும்
          ஆடுபொற் கிண்கிணி அடிமிசை அரற்ற
          நீடி யன்ன நிழலறை மருங்கிற்
          பந்தெறிந் தாடியும் பாவை புனைந்தும்
     45   அந்தளிர்ப் படைமிசை அயர்ந்தனர் ஒடுங்கியும்
 
        37 - 45 ; பேறரும்...........ஒடுங்கியும்
 
(பொழிப்புரை) வாசவதத்தையின் செல்வமும் சிறப்பும் பொருளாக அமைந்த பாடல்களைப் பன்முறையும் பாடிக்குராமரத்தின் நீழலிலே வளையல் ஒலிப்பக் குரவைக் கூத்தாடியும், அடியின்கண் சதங்கை ஒலிப்ப நிழலுடைய பாறைநிலத்தே தம்முள் மாறுபட்டு நின்று பந்தெறிந்து ஆடியும் பாவை புனைந்தும் அழகிய தளிராலியற்றிய படுக்கையின்கண் படுத்து அயர்ந்து உறங்கியும் என்க
 
(விளக்கம்) 37 - 38. பெறுதற்கு அரிய கற்பினையுடைய வாசவதத்தை, பிரச்சோதனன், மகளாகிய வாசவதத்தை, மாறு அடு வேல்கண்ணையுடைய வாசவதத்தை எனத் தனித்தனி கூட்டுக. மாறு - பகைவர் வேற்கண்; உவமத்தொகை.
    39. சிறப்பு கற்புடைமை அறிவுடைமை பெண்மை நலமுடைமை முதலியன. பல்லூழ் - பலமுறையும்.
    40 - 41 மரா அங் குராஅ நீழல் என மாறி மராமரம் குராமரம் இவற்றின் நீழலிலே என்க குரவை, - மகளிர் ஆடும் ஒருவகைக் கூத்து. ஆடி மகிழ்ந்தனராகிய தம்முள் மறலியும் நின்று பந்தெறிந்து ஆடியும் என்க - மறலுதல் - எதிர்த்தல். பாவை புனைந்தும் - மணற் பாவை முதலியவைகளை இயற்றியும்   
    45. அம் தளிர்ப்படை - அழகிய தளிரால் இயற்றிய படுக்கை,
    46. ஒடுங்கியும் - உறங்கியும்.  பொறிபுலன் அனைத்தும் ஒடுங்குதல் பற்றி உறக்கத்தை ஒடுக்கம் என்றார்