உரை
 
2. இலாவாண காண்டம்
 
14. உண்டாட்டு
 
          ஏனற் குறவர் இருங்குடிச் சீறூர்
          மானமர் நோக்கின் மகளிரொடு மரீஇ
          வெங்கண் மறவர் வில்லின் வீழ்த்த
          பைங்கண் வேழத்துப் பணைமருப் புலக்கையின்
     50   அறையுரல் நிறைய ஐவனப் பாசவல்
          இசையொடு தன்னையர் இயல்புபுகழ்ந் திடிக்கும்
          அம்மனை வள்ளை.இன்னிசை கேட்டும்
          கோயின் மகளிர் மேயினர் ஆடப்
 
        46 - 53; ஏனல்,,,,,,மேயினராட
 
(பொழிப்புரை) குறவர்கள் பெருங்குடியிருப்புக்களையுடைய சிறிய ஊர்களிலே சென்று அக்குறவர் மகளிரோடு சேர்ந்து, அக் குறமகளிர்  தம் மறவர்வில்லாலே கொன்று வீழ்த்தப்பட்ட யானையினது பரிய கொம்பாகிய உலக்கையைக்கொண்டு பாறைக் கல்லிற் குழித்த உரல் நிறையும்படி மலை நெல்லைப் பெய்து இசைப்பாடலாலே தந்தமையன்மார் தன்மையைப் புகழ்ந்து இடிக்கும் உலக்கைப் பாட்டினைக் கேட்டு மகிழ்ந்தும் இங்ஙனமாக விருப்பமுடையராய் விளையாடாநிற்ப என்க.
 
(விளக்கம்) 15 - 53, கோயின் மகளிர் வேறு வேறு இயலி ஆடியும், இழைத்தும், வைத்தும், தூக்கியும், பறித்தும், தொடுத்தும் பிணைத்தும், கிள்ளியும், தைஇயும், மறலியும். ஆடியும், புனைந்தும், ஒடுங்கியும் கேட்டும் மேயினராய் ஆடாநிற்ப என்க.
    46, ஏனற் குறவர் - தினைப்புனங்களையுடைய குறவர். இருங்குடி - பெருங்குடி, சீறூர் - குறிஞ்சி நிலத்துள்ள சிறிய ஊர்.
    47. மான் அமர் நோக்கு - மான்களும் விரும்பும் நோக்கம் மரீஇ - மருவி ; சேர்ந்து,
    48. வெங்கண் - தறுகண். வில்லினாலே கொன்று வீழ்த்த என்க,
    49, பணைமருப்பு - பருத்த கொம்பு.     
    50, அறையுரல் - பாறைக் கல்லிலே குழித்த உரல். ஐவனம் - மலைநெல். பாசவல் - வறாதே இடிக்கும் அவல்.
    51. இசைப்பாட்டிலே தந்தமையன்மார் புகழை விரவிப் பாடி என்க.
    52. அம்மனை வள்ளை - உலக்கைப்பாட்டு. இயல்பு - மறத்தன்மை முதலியன, மேயினர் விரும்பி; முற்றெச்சம்.