உரை
 
2. இலாவாண காண்டம்
 
15. விரிசிகை மாலைசூட்டு
 
           துறக்கக் கிழவனுந் துன்னிய காலை
           இறக்க லாகா எழிற்பொலி  வெய்தித்
     15     தண்பூந் தணக்கந் தமாலந் தகரம்
           ஒண்பூங் காந்தள் வெண்பூஞ் சுள்ளி
           வீயா நாற்றமொ டணிவளங் கொடுப்பக்
           கையமைத் தியற்றிய செய்சுனை தோறும்
           வராலும் வாளையும் உராஅய் மறலக்
     20    கழுநீர் ஆம்பல் கருங்கேழ்க் குவளையொடு
           கொழுநகைக் குறும்போது குறிப்பிற் பிரியாப்
           புணர்ச்சி மகளிர் போகத்துக் கழுமித்
           துயிற்கண் திறந்த தோற்றம் போல
           நறவுவாய் திறந்து நாண்மதுக் கமழ
     25    அறுகால் வண்டினம் ஆர்ப்ப அயலே
 
           13 - 25; துறக்க,.,..,,ஆர்ப்ப
 
(பொழிப்புரை) இந்திரனும் ஒருகால் அங்ருவந்து புகுந்த பின்னர் அவ்விடத்தைவிட்டு நீங்கவியலாமைக்குக் காரணமான அழகுப் பொலிவினை யுடையதாய்த் தன்னகத்தே தணக்கம், தமாலம், தகரம் காந்தள், மரரமரம், என்னும் மரங்கள் ஒழியாத  நறுமணத்தோடே அழகு வளத்தினைச் செய்யா நிற்பவும்,  ஆண்டுள்ள செய்சுனைகள்தோறும் வராலும் வாளையும்  உலாவி எதிராநிற்பக் கழுநீரும் ஆம்பலும் நீலமும், தத்தம்   மலர்வாய்களைத் திறந்து புதிய தேன்மணத்தைக் கமழச்செய்ய அந்த மணத்தை நுகர்ந்த வண்டுகள் அவற்றின் அயலே   இன்னிசை முரலாநிற்பவும் என்க,
 
(விளக்கம்) துறக்கக் கிழவன் ; இந்திரன். உம்மை ; உயர்வு சிறப்பும்மை. துன்னிய காலை - அங்கு ஒருகால் வருவானாயின் என்க, இறக்கலாகா - பின் அவ்விடத்தை நீங்கிப்போக இயலாமைக்குக் காரணமான என்க, எழிற்பொலிவு - அழகாலுண்டான பொலிவு.
    15.   தண்பந் தணக்கம் - குளிர்ந்த மலர்களையுடைய தணக்க மரங்கள். தணக்க முதலியன மரவகைகள்.
    16.   ஒண்பூங்காந்தள் - ஒளியுடைய மலர்களையுடைய தோன்றி  என்க, சுள்ளி - மராமரம்,
    17.   வீயா நாற்றம்- ஒருபொழுதும் கெடாத மணம். அணி வளம் - காட்சியின்பம்,
    18. துறவிகள் தங்கள் கைத்தொழிலாலே இயற்றப்பட்ட செயற்கைச் கனைகள் தோறும் என்க.
    19. வரால் வாளை என்பன மீன்வகை. உராஅய் -உராய்ந்துஎனினுமாம்.
  மறல - மாறுபட.
    20 - 24. கழிநீர், ஆம்பல், குவளை முதலியவற்றின் அரும்புகள் கணவன் குறிப்பினின்றும் நீங்காத குலமகளிர் தத்தங் கணவரொடு புணர்ந்த புணர்ச்சியிற்பின் நிகழ்த்தும் இன்ப நித்திரைப்பொழுதில் அவர் கண் இன்பமெய்ப்பாடொழுகச் சிறிதே திறந்திருந்தாற்போலத் தத்தம் தேன்றுளிக்கும் வாயைச் சிறிதே திறந்து மணங்கமழ்விக்க என்க.
    20. கருங்கேழ்க்குவளை-கரிய நிறமுடைய குவளை அரும்பு என்க,
    21. கொழுநகைக் குறும்போது-கொழுவிய ஒளியையுடைய  அரும்பு
    .22. கணவர் குறிப்பினின்றும் விலகாத குலமகளிர். போகத்துக்கழுமி - நுகர்ச்கியின்பத்தாலே நிறைந்து துயிலும் துயில் என்க, துயில் - இன்ப நித்திரை,
    24. நறவு -தேன். நாள்மது-புதுத்தேன்.
    25. அறுகால் -ஆறுகால்களையுடைய வண்டினம் என்க.