உரை
 
2. இலாவாண காண்டம்
 
15. விரிசிகை மாலைசூட்டு
 
           ______________________அயலே
           அந்தீம் பலவும் அள்ளிலை வாழையும்
           முதிர்கோள் தெங்கொடு முன்றில் நிவந்து
           மணிக்கண் மஞ்ஞையு மழலை அன்னமும்
           களிக்குரற் புறவுங் கருங்குயிற் பெடையும்
     30    பூவையுங் கிளியும் யூகமும் மந்தியும்
           மருளி மாவும் வெருளிப் பிணையும்
           அன்னவை பிறவுங் கண்ணுறக் குழீஇ
           நலிவோர் இன்மையின் ஒலிசிறந் துராஅய்
           அரசிறை கொண்ட ஆவணம் போலப்
     35    பொலிவொடு புணர்ந்த பொழிலகம் புதைஇப்
 
           25- 35 ; அயலே.,....புதைஇ
 
(பொழிப்புரை) பலாவும் வாழையும் தெங்கும் முன்றிலின்  கண் உயர்ந்து நிற்பவும், மயிலும் அன்னமும் புறவும் குயிலும் இவற்றின் பெடைகளும், நாகணவாய்ப்புள்ளும், கருங்குரங்கும், மந்தியும், கலையும், பிணையும், இன்னோரன்ன பிறவும் கூடித்தம்மை நலியும் தீயோர் எக்காலத்தும் அவ்விடத்தே இல்லாமையான், அச்சமில்வாய் ஆரவாரித்து உலாவாநிற்றலான், அரசன்  வீற்றிந்ததொரு வீதிபோலப் பொலிந்து திகழும் பொழிலினூடே மறைந்து என்க.
 
(விளக்கம்) அழகும் இனிமையும் உடைய பலாமரமும்  என்க. அள்ளிலை - செறிந்த இலை
    27, முதிர்கோள் தெங்கு-முதிர்ந்த குலைகளையுடைய தென்னை. முன்றில் - தவப்பள்ளியின் முற்றம். நிவந்து - உயர்ந்து நீலமணிபோன்ற புள்ளிகளையுடைய மயில்களும் என்க. மழலை அன்னம் என்புழி மழலை, இளமைப்பண்பு குறித்துநின்றது மழலை மொழியுடைய  அன்னம் என்பாருமுளர்.
    29. களிக்குரல் புறவு - களிப்பிற்குக் காரணமான இனிய குரலையுடைய ( புறவும் அவற்றின் பெடைகளும் என்க)
    30. பூவை - நாகணவாய்ப்புள், மந்தி-பெண்குரங்கு, 31  மருளிமா - மருளும் இயல்பையுடைய மான், வெருளிப்பிணை-அஞ்சுதலையுடைய பெண்மான் என்க.
    32 கண் -இடம். ஒலிசிறந்து - ஆரவாரம் மிகுந்து.
    33, நலிவோர் - தம்மை நலிபவர்.
    34. அரசிறை கொண்ட ஆவணம் - அரசர் தங்கிய வீதி.
    35. புதைஇ - மறைந்து. புதையப் பெற்றென்க. பொழிலினூடே மறைந்தென்க.