உரை
 
2. இலாவாண காண்டம்
 
15. விரிசிகை மாலைசூட்டு
 
           பெருந்தகு படிவமொடு பிறப்பற முயலும்
           அருந்தவ நோன்மையர் ஆத்திரைக் கொட்டிலிற்
           கேள்வி முற்றிக் கிரிசை நுனித்த.
           வேள்விக் கலப்பை விழுப்பொருள் விரதத்துச்
     40    சீரை யுடுக்கை வார்வளர் புன்சடை
           ஏதமில் காட்சியோர் மாதவர் உறையும்
           பள்ளி குறுகி ஒள்ளிழை மகளிரொடு
           வான்பொற் கோதை வாசவ தத்தையும்
           காஞ்சன மாலையுங் காண்டற் ககலப்
     45    பெருந்தண் பிண்டி பிணங்கிய நீழல்
           அரும்படைத் தானை அகன்ற செவ்வியுள்
           வயந்தக குமரனொடு வத்தவன் இருந்துழி
 
            36- 47; பெருந்தகு.,....,இருந்துழி
 
(பொழிப்புரை) தவவேடத்தோடே பிறவிப்பிணிதீர முயலாநின்ற அரிய தவவவிமையையுடைய யாத்திரையாளர் வந்து  தங்காநின்ற கொட்டிலின்கண் மெய்ப்பொருட் கேள்வியாலே முதிர்ந்து  அந்நெறியிலே ஒழுகி முதிர்ந்தவரும், வழிபாட்டிற்குரிய பொருள்கள் வைத்த பைகளை யுடையோரும், மெய்ப் பொருளை எய்துதற்குரிய விரதத்தினையுடையோரும், மரவுரி உடுத்தவரும் சடையினையுடையவரும் குற்றமற்ற மெய்க்காட்சி யுடையோரும் ஆகிய சிறந்த துறவோர் உறைதற்கிடமான தவப்பள்ளியை அடைந்து ஆண்டுறையும் துறவியரைக் காண்டல் காரணமாக, ஆயமளிரோடே வாசவதத்தையும் காஞ்சனமாலையும் உதயணகுமரனை நீங்கிச் செல்லா நிற்பவும், அரிய படைக்கலங்களையுடைய மறவரும் தன்னை நீங்கி அகன்ற செவ்வியிலே, அவ்வுதயணகுமரன் வயந்தககுமரன் என்னும் அமைச்சனோடு இருந்த பொழுது என்க.
 
(விளக்கம்) 36, பெருந்தகு படிவம்-பெருமை தக்கிருக்கின்றதவவேடம்.
    37, நோன்மை-வலிமை,
    38, கேள்வி-ஞனாக்கேள்வி. கிரிசை-கிரியை; ஒழுக்கம்.
    39. வேள்வி-பூசனை. கலப்பை-கலங்களையுடைய பை.விழுப்பொருள் - இறைப்பொருள்.
    40. சீரை -மரவுரி. வளர்வார்சடை என  மாறுக,வளர்கின்ற நெடிய சடை என்க, பேணப்படாமை தோன்ற, புன்சடை என்றார்.
    41, எதமில் காட்சி - மெய்க்காட்சி. மாதவர்-பெரிய தவத்தையுடைய துறவோர்.
    42. ஒள்ளிழை மகளிரொடு-ஒள்ளிய அணிகலன்களையுடைய மகளிருடன்.
    43. வான்பொன் -சிறந்தபொன்,
    44, காண்டற்கு - தவப்பள்ளிகளையும் துறவோரையும் காணுதற் பொருட்டு,
    45-47 அரும்படைத்தானை அகன்ற செவ்வியுள்  பெருந்தண்பிண்டி நீழல் வயந்தக குமரனொடு வத்தவன் இருந்துழி எனமாறுக. பிண்டி-அசோகு. கிளைகளடர்ந்து பின்னியதனாலே உண்டான நீழலில் என்க. அரும்படை-அரிய படைக்கலன். தானை-சேனை. செவ்வி-அமயம், வத்தவன்; உதயணகுமரன்.