உரை
 
2. இலாவாண காண்டம்
 
15. விரிசிகை மாலைசூட்டு
 
         
     70    றஞ்சில் ஆகத் தெஞ்சுதல் இன்றித்
           திணைமுதல் இட்ட செங்கண் முகிழ்முலை
           அணைபுரை மென்மை அமைபடு பணைத்தோள்
           காம்பமை சிலம்பிற் கடிநாட் காந்தட்
           பூந்துடுப் பன்ன முன்கையிற் பொலிந்து
     75    கொழுமுகை குவித்த செழுமென் சிறுவிரல்
           கிளிவாய் அன்ன ஒளிவாய் உகிரின்
           விரிந்துநிலா நிறைந்த மேதகு கமுகின்
           எருத்திற் கேற்ற திருத்தகு கழுத்தின்
           கூடுமதி அன்ன சேடணி திருமுகத்
     80    தகழ்கடற் பிறந்த ஆசறு பேரொளிப்
           பவழக் கடிகை பழித்த செவ்வாய்
 
           70 - 81 ; அஞ்சிலாகத்து.,....செவ்வாய்
 
(பொழிப்புரை) மார்பிடத்தை எஞ்சாது கவர்ந்துகொண்டு அடியிட்டு முகிழ்த்த சிவந்த கண்களையுடைய முலையினையும், பஞ்சணையை நிகர்த்த மென்மை யுடையதும் அழகிய மூங்கில் போன்றதுமாகிய தோளினையும், காந்தள் துடுப்பை ஒத்த முன் கையினையும், அம்முன்கையின் கண் அக்காந்தளினது சிற்றரும்புகளை ஒத்தமெல்லிய சிறுவிரல்களினையும், கிளியினது அலகை ஒத்த ஒளிவாய்ந்த நகத்தினையும், கமுகினை ஒத்ததும் பிடரியில் பொருந்திய அளவிற்கு அழகுடையதும் ஒளிவிடுவதும் மேன்மை தக்கிருப்பதும் ஆகிய கழுத்தினையும், முழுமதிபோன்ற .அழகுடைய முகத்தினையும், அம்முகத்தின்கண் கடலிலே தோன்றிய குற்றமற்ற ஒளியையுடைய பவழத்துணுக்கினைப் பழித்த சிவந்த வாயினையும், என்க.
 
(விளக்கம்) 70, அம்சில் ஆகம்-அழகிய சிலவாகிய உரோமங்கள் பொருந்திய மார்பிடத்தை என்க. எஞ்சுதல் இன்றி - (முழுதும்) குறைகிடவாமல்.
    71.. திணை முதலிட்ட - இருப்பிடமாக அடியிட்டஎன்க. திணை - இடம். முகிழ்முலை; வினைத்தொகை.
    72, அணைபுரை - பஞ்சணையை ஒத்த. அமை - அழகு(பிங்கல - 3068,) பணை - மூங்கில்
    73 - 4. மூங்கில் பொருந்திய மலையின்கண்ணுள்ள மணமுடைய  காந்தளினது புது மலரை ஒத்த முன்கை என்க. துடுப்புப் போறலின் காந்தண்மலர் துடுப்பெனப்பட்ட.துகாந்தள் கடிநாட், பூந்துடுப்பு என மாறுக. நாள் துடுப்பு -அன்று மலர்ந்த பூ என்க. முன்கையினையும் அக்கையினிற் பொலிந்து குவித்த விரலினையும்  என்க.
    75 கொழுவிய அக்காந்தண் முகையைக் குவித்தாற் போன்ற செழுமை யுடைய மெல்லிய விரலினையும் என்க,
    76, கிளிவாய் - கிளியினது அலகு, ஒளிவாய்த்த உகிர் என்க. உகிர் - நகம்.
    77 - 8. விரிந்துநிலா நிறைந்த கழுத்து, மேதகு கமுகினை ஒத்த கழுத்து, எருதிற்கேற்ற கழுத்து, திருத்தகு கழுத்து அனத் தனித் தனி கூட்டுக.    
    79, கூடுமதி-எல்லாக்கலைகளும் கூடிய முழுத்திங்கள், சேடு- பெருமை. திருமுகத்தினையும் அம்முகத்தின்கண் என விரிக்க.
    80. அகழ்கடல், சகரரால் அகழப்பட்ட கடல் என்க. ஆசு - குற்றம், பவழக்கடிகை - பவழத் துணுக்கு; இது நிறத்திற்குவமை.