உரை
 
2. இலாவாண காண்டம்
 
15. விரிசிகை மாலைசூட்டு
 
           இருந்தினி தொழுகும் இயன்மலைப் பள்ளியுள்
     95    அருந்தவர் அல்லதை ஆடவர் அறியாள்
           தவிர்வில் காதலொடு தன்வழிப் படூஉம்
           கவர்கணை நோன்சிலைக் காமன் இவனெனும்
           மையல் உள்ளமொடு பைய இயலிப்
           பிள்ளைமை கலந்த பேதைப் பெரும்பிணை
     100    வெள்ளை நோக்கமொடு விரும்புபு விதும்பிப்
           பவழப் பாவையும் பந்துங் கிடைஇப்
           புகழப் பட்ட பூமரக் காவினுள்
           நந்தி வட்டமு நாகத் தலரும்
           சிந்து வாரமுஞ் சேபா லிகையும்
     105    மணிக்குருக் கத்தியு  மணிப்பூஞ் சுள்ளியும்
           நாட்சிறு சேடமு நறுஞ்செண் பகமும்
           கோட்கமைந் தேந்திய கோலப் பன்மலர்
           அம்பூங் குடங்கை அகவயின் அடக்கிக்
           கொம்பேர் மருங்குல் கோமகற் குறுகித்
     110    திருந்துவாய் திறந்து தேனென மிழற்றிப்
           பெருந்தண் மலரிற் பிணையல் தொடுத்தென்
           பாவையும் யானும் பண்புளிச் சூடுகம்
           ஈமின் ஐயவென் றிரந்தனள் நீட்ட
 
           94 - 113 ; இருந்தினிது,,,,,,நீட்ட
 
(பொழிப்புரை) இவ்விரிசிகை தான் உறைந்து ஒழுகா நின் அம்மலைச் சாரலின்கண் அமைந்த துறவோரை அறிந்திருப்பாள் அல்லது, பிற ஆடவரை அறிந்ததில்லை, அத்தகையோள் உதயணகுமரன் இருந்த பொழிலின்கண் வந்து அவனை நோக்கினாள்; அங்ஙனம் நோக்கியவள், இவன் தான் கதைவாயிலாய்க் கேட்டிருந்த காமனே போலும்.! இவன் தன்பாற் காதலுடையவனாய் அநங்கனாயினும் இவ்வுருவத்தோடே தன்பால் எய்தினான் போலும் என்னும் கருத்துடையவளாய் மயங்கிய நெஞ்சத்தோடு   மெல்லமெல்ல நடந்து பிள்ளைமைத்தன்மை கலந்த பெண்மான் நோக்கம் போன்றதொரு வெள்ளை நோக்கத்தோடே அவ்வுதயணனைப் பெரிதும் விரும்பித் தனது பாவை பந்து முதலிய விளையாட்டுக் கருவிகளைப் போகட்டு விட்டுத் தான் அப்பொழிவில் கொய்துவைத்திருந்த நந்தியாவட்டம் முதலிய பலவேறு மலர்களைத் தன் அங்கையில் ஏந்திச் சென்று அக் கோமகனை எய்தி அழகிய தன்வாயினைத் திறந்து தேன்போன்ற சில.மொழிகளாலே 'ஐய! இம் மலர்களை மாலையாகத் தொடுத்துத் தருக! அங்ஙனம் தரின் அவற்றை யானும்என் பாவையும்சூடா  நிற்பேம்' என்று இரந்து கூறி அவற்றை உதயணனுக்க்குக்  கொடாநிற்ப என்க.
 
(விளக்கம்) 94 - 95. இனிதாக உறைந்து வரும் அழகிய அம்மலைப் பள்ளியின் கண் உள்ள அரிய தவவொழுக்கமுடைய துறவோரை  அல்லது என்க. ஆடவர் - பிறஆடவர்.
    96.  தன்னை விரும்பித் தன்பால் வந்த காமன் என்க, 97 - 98  உளத்தைக் கவரும் மலர்க்கணையினையும் வலிய கருப்பு வில்லினையும் உடையோன் என யான் கதையிற்கேட்ட அக்காமனே இவன் என்று துணிந்து அவன்பால் மயங்கிய நெஞ்சத்தோடே மெல்ல நடந்து என்க.
    99. பேதைப் பெரும்பிணையினது நோக்கம் போன்றதொரு  வெள்ளை நோக்கத்தோடு விரும்பி விதும்பி என்க., எனவே அவ்விரிசிகை காமஞ்சாலா இளமைப் பருவத்தாளாயிருந்தும் உதயணன்பாற் பழம்பிறப்பிற்றொடர்பு பட்டமையானும்  அவனது பேரழகானும் அவனைக்காண விரும்பிக் கண் விதுப்புற்றனள் என்பது கருத்தாயிற்று பேதைப்பிணை - பெண்னாகிய பிணைமான், பிள்ளைமை கலந்த வெள்ளைநோக்கம் - காமமுதலியன கலவாத பிள்ளைத்தன்மையுடைய நோக்கம். விதும்புதல் - வேட்கை மிகுதியினால் காண்டற்கு விரைதல். காட்சி விதுப்பினாலே பாவை முதலிய விளையாட்டுக்கருவிகளை அவ்விடத்திலேயே போகட்டு என்க; 102. கிடைஇ - கிடக்கச்  செய்து.
    103. புலவர் முதலியோராற் புகழப்பட்ட அழகுடைய பூமரக்காவினுள் என்க
    104. நந்தி வட்டம்; நந்தியாவட்டம். நாகத்தலர் - நாகப் பூ.
    104. சிந்துவாரம் - சேபாலிகை என்பன நொச்சி வகைகள். அவற்றின் மலர்க்கு ஆகுபெயர்
    105. மணிபோன்ற நிறமுடைய குருக்கத்திமலர் என்க,பணிப்பூ - அணிகலன் போன்ற மலர். சுள்ளி-மராமரப்பூ.
    106. நாள் சிறு சேடம் - புதிதலர்ந்த சிறு சேடமலர் என்க.
    107, தான்கொய்து கொள்ளுதற்குப் பொருந்தி இருந்தவற்றைக் கொய்து ஏந்திய அழகிய அப் பலவேறு மலர்களையும் என்க.
    108. குடங்கை - அகங்கை (உள்ளங்கை) குடலையுமாம்.
    109, கொம்பு ஏர் மருங்குல்-பூங்கொம்பு போன்ற இடையினையுடைய அவ்விரிசிகை என்க. கோமகன்; உதயணகுமரன்.
    111. பிணையல்-மாலை.
    112. பண்புளி - பண்போடே. சூடுகம்-சூடுவேம்.
    113. ஈமின்-கொடுமின், இரந்தனள்; முற்றெச்சம்.