உரை
 
2. இலாவாண காண்டம்
 
15. விரிசிகை மாலைசூட்டு
 
         
     135    ஈயக் கொண்டுதன் எழின்முடிக் கேற்பச்
           சூடுதல் தேற்றாள் சுற்றுபு திரியும்
           ஆடமைத் தோளி அலமரல் நோக்கி
 
           135 - 137 ; ஈயக்கொண்டு.,,,,,அலமரனோக்கி
 
(பொழிப்புரை) இங்ஙனம் உதயணண் அளிப்ப அவ்விரிசிகை அவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றைத் தன் அழகிய முடிக்கேற்பச் சூடுதலை அறியாதவளாய்த் தன்மனம் போனபடி அவற்றை முடியிலே சுற்றிக்கொண்டு திரிந்தாளாக; அங்ஙனம்  திரியா நின்ற அவ்விரிசிகையினது மனச்சுழற்சியை அவ் வுதயணன் குறிப்பால் உணர்ந்து என்க. 
 
(விளக்கம்) 135. அழகிய தன் மயிர்முடிக்குப் பொருந்த.
    136, சூடுதல் தேற்றாள் - சூடுதலை அறியாதவளாய், சுற்றுபு - தன் மனம்போனவாறு சுற்றிக் கொண்டென்க,
    137. ஆடமைத் தோளி - ஆடாநின்.ற மூங்கிலை ஒத்த தோளையுடைய அவ்விரிசிகையினுடைய, அலமரல் - சுழற்சி, மனக்கலக்கம்.