உரை
 
2. இலாவாண காண்டம்
 
15. விரிசிகை மாலைசூட்டு
 
           மடவரன் மாதரை வாவென அருளித்
           தடவரை மார்பன் தாண்முதல் உறீஇ
     140    உச்சிக் கேற்ப ஒப்பனை கொளீஇப்
           பக்கச் சின்மலர் பத்தியிற் கட்டுபு
           நீல நாகம் பைவிரித் தன்ன
           கோலச் சிகழிகை தான்முதல் சேர்த்தி
           அஞ்செங் கத்திகை அணிபெற அடைச்சிப்
     145    பைங்கேழ்த் தாமம் பக்கம் வளைஇ
           இருளறு மதியின் திருமுகஞ் சுடர
           அமைபுரி தோளியை அன்பின் அளைஇப்
           புனைமலர்ப் பிணையல் சூட்டினன் புகன்றென்.
 
           138 - 148 ; மடவரன் மாதரை,,,,,,.புகன்றென்
 
(பொழிப்புரை) அவ்விரிசிகையை வா என்று அழைத்து அவ்வுதயணகுமரன் அவளைத் தன் மடிமேலிருத்தி அவளது அழகிய முடிக்குப் பொருந்த ஒப்பனை செய்து அம் முடியின் பக்கத்தே சிலவாகிய மலரையிட்டு நிரல்படக் கட்டி நீலநாகம் தனது பையை விரித்தாற் போன்று தோன்றும் அழகினையுடைய சிகழிகையை முன்னர்ச் சேர்த்து அழகிய சிவந்த மாலைகளையும் அழகுண்டாகச் செருகிப் பசிய நிறமுடைய மாலைகளை அவற்றின் அயலே வளைத்து அமைத்து அவள்முகம் முழுமதி போலச் சுடர்விட்டு விளங்கும்படி செய்து அவ்விரிசிகையை அன்பினாலே கலந்து தான் புனைந்த பிணையல்களையும் விரும்பிச் சூட்டாநின்றனன் என்க.
 
(விளக்கம்) 141. சின்மலர் -சிலவாகிய விடுபூக்களை, பத்தி - வரிசை, கட்டுபு - கட்டி. விடுபூக்களைச் சரமாகக் கட்டி என்க.
    142. நீலநிறமுடைய நாகப்பாம்பு தனது படத்தை விரித்தாற் போன்ற அழகுடைய சிகழிகை என்க. சிகழிகை - மயிர்முடி, தான் ; அசை
    144. அம்செங் கத்திகை - அழகிய சிவந்த மாலை, அடைச்சி -  செருகி.
    145.. பைங்கேழ்த் தாமம் - பசிய நிறமுடைய மாலை. 146, இருளறு மதி - முழுத்திங்கள்.
    147. மூங்கிலை ஒத்த தோளையுடைய அவ்விரிசிகையை அன்பின் அளைஇ என்றது அன்பாலே கலந்து என்றவாறு இ.ஃது அவளை அவன் காதலித்தானாயவாறு கூறிற்று
    148, புகன்று சூட்டினன் என மாறுக. புகன்று - விரும்பி.

              15. விரிசிகை மாலைசூட்டு முற்றிற்று.
               --------------------------------