உரை
 
2. இலாவாண காண்டம்
 
16. ஊடல் உணர்த்தியது
 
         
     5    வேண்டிடத் தாடும் விருப்புறு நீக்கம்        
          யாண்டுகழிந் தன்ன ஆர்வம் ஊர்தரத்     
          தழையுங் கண்ணியும் விழைவன ஏந்திப்        
          பொற்பூங் கிண்கிணி புறவடிப் பிறழ
          நற்பூங் கொம்பர் நடைபெற் றாங்குக்
     10    கவவுறு காதலிற் கண்ணுற வரூஉம்
          உவவுறு மதிழகத் தொளிவளை முன்கைக்
          கண்ணார் கனங்குழை கதுமெனக் கண்டே
 
        [வாசவதத்தை வருதலும் அவள் அந்நிகழ்ச்சியை அறிந்து ஊடுதலும்]
                5 - 12 ;  வேண்டிடத்து...................கண்டே
 
(பொழிப்புரை) உதணனைச் சிறிது பொழுது பிரிந்துதான் விரும்பிய விடத்தே ஆடுதல் வேண்டும் என்று விரும்பிய விருப்பத்தால் உற்ற அச்சிறு பிரிவுதானும் ஓரியாண்டு கழிந் தாற்போன்று தோன்றி விதுப்புறுத்தலானே அவ்வுதயணனைக் காண்டற்கு ஆர்வம் பெருகாநிற்பத் தழையும் மாலையுமாகிய தான் விரும்பியவற்றைக் கையிலேந்திக் கொண்டு கிண்கிணி புறவடியிற் கிடந்து பிறழ்ந்தொலிப்ப அழகியதொரு பூங்கொடி நடத்தலைப் பயின்றாற் போன்று ஒல்கி நடந்து காதன் மிகுதியாலே காண்டற்கு வாராநின்ற முகமுதலியவற்றையுடைய வாசவதத்தை அவ்வுதயணன் விரிசிகைக்கு மாலை சூட்டி விடுத்த நிகழ்ச்சியினைக் கதுமெனக் கண்டனளாக என்க,
 
(விளக்கம்) 5. வேண்டிடம் - தான் விரும்பும் இடத்தின்கண். விருப்புறு நீக்கம் - விருப்பத்தால் உற்ற சிறு பிரிவு.
   6. யாண்டு கழிந்தன்ன - ஓரியாண்டு பிரிந்திருந்தாற் போல. அச்சிறு பிரிவு மிக நீளிதாய்த் தோன்றி வருத்த என்பது கருத்து,
      'உவக்காண்எங் காதலர் செல்வார் இவக்காண்என்
      மேனி பசப்பூர் வது'                 (குறள் . 1185) எனவும்,

      'ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார்
      வருநாள்வைத் தேங்கு பவர்க்கு'       (குறள் , 1269)
  எனவும் வரும் அருமைத் திருக்குறள்களானே தலையன்புடைய காதலர்க்குச் சிறு   பிரிவும் நீளிதாய்த் தோன்றிப் பசப்புறுத்தி வருத்துமியல்புடைத்தாத லறிக.
   7. விழைவன - தன்னால் விரும்பப்பட்டன.
   8. கிண் கிணி - சதங்கை,
   9. நற்பூங்கொம்பர் - நல்ல பூங்கொடி, இது தழையுங் கண்ணியும் ஏந்தி   அசைந் தொல்கி நடக்கும் வாசவதத்தைக்கு உவமை. நடைபெற்றாங்கு -   நடந்தாற்போன்று.
   10, கவவுறு காதல் - அகத்தே பின்னிக் கிடந்த அன்பு, கண்ணுற -   காண்டற்கு,
   11 - 12 பூரணையைப் பொருந்திய முழுவெண்டிங்கள் போன்ற   முகத்தினையும், ஒளியையுடைய வளையல் அணிந்த முன்கையினையும் கண்னுக்கு   நிறைந்த அழகுடைய பொற் குழையினையும் உடைய வாசவதத்தை என்க.  கதுமென - விரைந்து ; (குறிப்புமொழி)