உரை
 
2. இலாவாண காண்டம்
 
16. ஊடல் உணர்த்தியது
 
          மண்ணார் மார்வன் மாதரைச் சூட்டிய
          காமர்ப் பிணையற் கதுப்பணி கனற்றத்
     15    தாமரை யன்னதன் தகைமுக மழுங்கா
          ஓடரி சிதரிய ஒள்ளரி மழைக்கண்
          ஊடெரி யுமிழு மொளியே போலச்
          சிவப்புள் ளுறுத்துச் செயிர்ப்பு முந்துறீஇ
          நயப்புள் ளுறுத்த வேட்கை நாணி
 
        13 - 19; மண்ணார்...................நாணி
 
(பொழிப்புரை) மார்வன் விரிசிகைக்குச் சூட்டிய கூந்தலணி தன் நெஞ்சத்தைக் கனற்றுதலானே செந்தாமரை மலரை ஒத்த அழகுடைய தன்முகத்தினது ஒளி மழுங்கா நிற்பவும்,குளிர்ந்த கண்கள தீப் போலச் சிவப்பவும், சினமுடையளாய்த் தான் அவ்வுதயணன்பாற் கொண்டுள்ள வேட்கைக்குத் தானே நாணியவளாய் என்க,
 
(விளக்கம்) 13. மண் ஆர் மார்வன் - ஒப்பனை பொருந்திய மார்பையுடைய உதயணகுமரன். மாதரை - விரிசி்கைக்கு,
   14. அழகிய மாலையாகிய கூந்தல் அணி என்க, கனற்ற - நெஞ்சத்தைக  கனலச் செய்தலானே.
   15. தாமரை - சிறப்பானே ஈண்டுச் செந்தாமரை மலரைக் குறித்து நின்றது, தகை - அழகு. மழுங்கா - மழுங்கி.
   16, ஓடாநின்ற வரிகள் சிதர்ந்த ஒள்ளிய அழகிய குளிர்ந்தகண்கள்  என்க, அரி இரண்டனுள் முன்னது வரி பின்னது அழகு என்க.
   17. அகத்தே கனலுமிழும் தீப்போல என்க. ஒளி - நெருப்பு.
   18, சிவப்பு - நிறம். செயிர்ப்பு - சினம். செயிர்ப்பு முந்துறீஇ   என்றது, சினந்து என்றவாறு.
   19. நயத்தலைத் தன்னகத்தே கொண்ட வேட்கை என்க. வேட்கை   - அவா. அதன் தொழில் நயத்தலாகலின் நயப்புள்ளுறுத்த வேட்கை   எனப்பட்டது. இங்ஙனம் பிற மகளிரையும் விரும்பும் இயல்புடைய   அவ்வுதயணன்பாற் செல்லாநின்ற தனது வேட் கையை நாணி என்பது கருத்து.