உரை
 
2. இலாவாண காண்டம்
 
16. ஊடல் உணர்த்தியது
 
           அகலு மாதரை அன்பிற் கெழீஇக்
           கலையுணர் கணவனொடு காஞ்சனை பிற்படக்
           கண்ணிற் காட்டிக் காம வெகுளி
           நண்ணின் மற்றிது நயந்துவழி யோடி
           மாசறக் கழீஇ மனத்திடை யாநோய்
           ஆரா வாய்முத் தார்த்தி னல்லது
      60   தீரா துயிர்க்கெனத் தெளிவுமுந் துறீஇ
           ஊராண் குறிப்பினோ டொருவயி னொதுங்கும்
           தன்னமர் மகளொடு தாய்முன் னியங்க
 
        [ காஞ்சனமாலை முதலியோர் வாசவதத்தையைத் தொடர்ந்து செல்லுதல் ]
                54 - 62 ; அகலும்........................இயங்க
 
(பொழிப்புரை) இங்ஙனம் புலந்து பூங்காவினூடெ செல்லாநின்ற அவ்வாசவதத்தையைத் தொடர்ந்து அவள் கணவனாகிய உதயண குமரனுங் காஞ்சனமாலையும் பின்னே செல்லாநிற்ப அவர்க்கு அச் சாங்கியத்தாய் இக் காம வெகுளி ஓருயிர்க்கு உண்டாயின் அது நெஞ்சத்தின்கண் ஒரு நோயாகும்; அந் நோய் வெகுளப்பட்டார் நயந்து பின்னின்று அக் குற்றந்தீரக் கழுவித் தமது வாய் முத்தம் ஆகிய மருந்தினை ஊட்டினாலன்றி அவ் வுயிர்க்குத் தீர்வதன்று என்று கூறிக் கண்ணானே குறிப்பாகக் காட்டிப் பின்னர் அவ்வாசவதத்தைக்கு உதவி செய்யும் ஒரு குறி்ப்போடு அவளோடு முன்னே செல்லா நிற்ப என்க,
 
(விளக்கம்) 54. மாதரை - அவ் வாசவதத்தையை  அன்பிற்கெழீஇ - அன்பினாலே பொருந்தி.
    55. கலைகளை நன்கு கற்றுணர்ந்தவனும் அவள் கணவனுமாகிய   அவ்வுதயணனோடென்க.
    56 - 62. தாய் ஓருயிர்க்கு காமவெகுளி நண்ணின் இது மனத்திடை நோய்   ஆகும்; வெகுளப்பட்டார் நயந்து வழியோடி மாசு அறக்கழீஇ முத்தார்த்தின்  அல்லது அந்நோய் அவ்வுயிர்க்குத் தீராது என்று பொதுவாகக் கூறிக் குறிப்பாற   காட்டித் தெளியுறுத்திப் பின்னர் ஒருவயின் ஒதுங்கும் தன் மகளோடு அவட்கு முன் இயங்க என இயைத்துக் கொள்க.
    56. கண்ணாற் குறிப்பாகக் காட்டி என்க. காம வெகுளி - ஊடல்.
    57. நண்ணின் - உண்டாயின். இது - இவ் வெகுளி. இது மனத்திடை நோயாம்   என மாறுக. 58. மாசு-அவ் வெகுளிக்குக் காரணமான குற்றம்.
    59, ஆரா வாய்முத்து - நுகர்ந்தமையாத வாய்முத்தமாகிய மருந்து என்க.  ஓருயிர்க்குக் காமவெகுளி நண்ணின் நோயாம்; இந் நோய் ஆர்த்தினல்லது  அவ்வுயிர்க்குத் தீராது என்று பொதுவாகக் கூறி என்க.
    61. ஊராண் குறிப்பு - உதவி செய்யுங் கருத்து
    62. மகள்; வாசவதத்தை. இயங்க - செல்ல,