உரை
 
2. இலாவாண காண்டம்
 
16. ஊடல் உணர்த்தியது
 
           நறவிளை தேறல் உறுபிணி போலப்
           பிறிதின் தீராப் பெற்றி நோக்கிக்
      65   குறிப்புவயின் வாரா ளாயினுங் கூடிப்
           பொறிப்பூண் ஆகத்துப் புல்லுவனன் ஒடுக்கி
           அருமைக் காலத் தகலா நின்ற
           திருமகட் பரவும் ஒருமகன் போல
           உரிமைத் தேவி உள்ளக நெகிழும்
      70   வழிமொழிக் கட்டளை வழிவழி அளைஇ
           முடியணி திருத்தியு முலைமுதல் வருடியும்
           அடிமிசைக் கிண்கிணி அடைதுகள் அகற்றியும்
           கதுப்பணி புனைந்துங் கதிர்வளை யேற்றியும்
           மதுக்களி கொண்ட மதரரி நெடுங்ண்
      75   கடைத்துளி துடைத்துங் கடிப்புப்பெயர்த் தணிந்தும்
           புதுத்தளிர் கொடுத்தும் பூம்புற நீவி்பும
 
        [உதயணன் வாசவதத்தையின் ஊடல் தீர்க்க முயலுதல்]
              63 - 76 ; நறவிளை.................நீவியும்
 
(பொழிப்புரை) வாசவதத்தை இங்ஙனம் ஊடிச் செல்லுதலைக் கண்ட அவ்வுதயண குமரன், கள்ளால் உற்ற நோய் அக் கள்ளாலேயே தீர்தலன்றிப் பிறிதொன்றனாற் றீராதது போன்று என்னாலுற்ற இந் நோய் என்னாலேயே தீர்தல் வேண்டும் என்று கருதி, அவ்வாசவதத்தை தன் குறிப்பிற்கிணங்கி வாராளாய்ச் செல்லா நிற்பவும், தானே அவளை எய்தித் தனது மார்பின்கண் தழுவிக்கொண்டு, ஒருவன் தன்னை விட்டகலும் திருமகளைப் புகழ்ந்து பரவுதல். போன்று அவ் வாசவதத்தையின் உள்ளம் நெகிழும்படி பணிமொழி பற்பல அடுத்தடுத்து மொழிந்து, மேலும் அவளுடைய தலைக்கோலங்களைத் திருத்தியும், முலையினை வருடியும் அவள் அடியில் அணிந்துள்ள கிண்கிணியினைத் துகள் போகத் துடைத்தும், கூந்தலின்கண் அணிந்துள்ள கோதைகளைத் திருத்தி அணிந்தும், ஒளியுடைய வளையல்களை உயர ஏற்றியும் கடைக்கண்ணின் பால் தேங்கிய துளியைத் துடைத்தும் காதணிகலனைக் கழற்றி மீண்டும் திருத்தமுற அணிந்தும், புதிய தளிர்களை அவள் கையிலே கொடுத்தும் பொலிவுடைய முதுகினைத் தடவியும் என்க.
 
(விளக்கம்) 63 - 64. நற - நறா; தேன். குறியதன் கீழ் ஆகாரம் குறுகியது. தேனாலே விளைவித்த தேறல் என்க. தேறல் - கள்ளினது தெளிவு, கள்ளாலே  உற்ற நோய்க்கு அக் கள்ளே மருந்தானாற்போலத் தன்னாலே உற்ற   இந் நோய்க்குத் தானே மருந்தாம் பெற்றியை நினைந்து என்க. 'கள்ளினாற் க  ள்ளறுத்தல் வேண்டும் அதுவன்றோ முள்ளினால் முள்களையுமாறு' (54)   என்பது பழமொழி.
    65. குறிப்புவயின் வாராளாயினும் - தன் கருத்திற்கிணங்கிவாராள் என  உணர்ந்திருந்தேயும் என்றவாறு.
    66. பொறியும் பூணும் புணர்ந்த ஆகத்து என்க. பொறி - திருமகள்.   பூண் - அணிகலன். ஆகம் - மார்பு, புல்லுவனன்; முற்றெச்சம், புல்லி ;    தழுவி. ஒடுக்கி - ஒடுங்கும்படி புல்லி என்றவாறு.
    67 - 68. ஒருமகன் தன்பால் இருத்தற்கரிய காலத்தே தன்னைவிட்டு அகலா  நின்ற திருமகளை மீண்டும் அவளருளைப் பெறப் பரவுவதுபோல என்க,   அருமைக் காலம் - திருமகளின் அருள் பெறற் கரிய  இழவூழ் உடைய காலம்   என்பதாம். பரவுதல் - இரந்து வேண்டுதல்.
    69. தன் உரிமையாகிய தேவி ; அவள் வாசவதத்தை.
    70. வழிமொழிக் கட்டளை - கேட்போர் கருத்தறிந்து அதற்கிணங்கக் கூறும்  பணிமொழி. மிகுதிச் சொல்லன்றி, பணிவு என்னும்  கட்டளைக்குட்படுத்த   சொல்லாகலின் வழிமொழிக் கட்டளை என்றார். கட்டளை - அளவு.   வழி வழி - மேலும் மேலும். அளைஇ - ஈண்டுக் கூறி என்னும் பொருட்டு,
    71. முடியணி - தலைக்கோலம்.
    72. கிண்கிணி - சதங்கை.
    73. கதுப்பு - கூந்தல். ணூதிர்வளை - ஒளியையுடைய வளையல்.
    74 - 75. மதுவின் களிப்பைக்கொண்ட மதர்த்த நெடிய கண்ணினது கடைப்பகுதியிற்   றேங்கிய கண்ணீர்த்துளியை என்க,
    75. கடிப்பு - ஒரு காதணிகலன்.
    76. புதுவதாகத் தான் கொய்து வந்த தளிரை என்க. பூம்புறம் - பொலிவுடைய   முதுகு. நீவியும் - தடவியும்,