உரை
 
2. இலாவாண காண்டம்
 
16. ஊடல் உணர்த்தியது
 
           செயிரிடை இட்டிது சிறக்குவ தாயின்
           உயிரிடை யிட்ட உறுகண் தருமெனத்
           தன்னுயிர்க் கணவன் உண்ணெகிழ்ந் துரைக்க
      80   அம்மொழி கேளா தசைந்த மாதரை
           அருவி அரற்றிசை அணிமுழ வாகக்
           கருவிரன் மந்தி பாடக் கடுவன்
           குரவை அயருங் குன்றச் சாரல்
           துகிலிணைப் பொலிந்த பகலணைப் பள்ளியுள்
      85   முகிழ்ந்தேந் திளமுலை முத்தொடு முழீஇத்
           திகழ்ந்தேந் தகலத்துச் செஞ்சாந்து சிதையப்
           பூண்வடுப் பொறிப்பப் புல்லுவயின் வாராள்
 
        77 - 87 ; செயிரிடை.................புல்லுவயின் வார
 
(பொழிப்புரை) ''''நங்காய்! என் குற்றத்தை நெஞ்சகத்தே கொண்டு ஊடாநின்ற இவ்வூடல் மிகுமாயின் அஃது என் உயிர்க்கே துன்பந் தருவதொன்றாம்' என்று தன் உயிர் போன்று கணவன் நெஞ்சம் நெகிழ்ந்து கூறாநிற்ப அம்மொழியினை ஏற்றுக் கொள்ளாமல் பின்னும் ஊடலானே மெலிந்த அவ் வாசவதத்தையைப் பின்னும் அவ்வுதயண குமரன் அருவி முழக்கம் அழகிய மத்தள முழக்கமாகக் கொண்டு மந்திகள் பாடா நிற்பக் கடுவன்கள் குரவைக் கூத்தாடாநின்ற அம்மலைச்சாரலில் துகிலணையாலே பொலிவுற்றதொரு பகற் பள்ளியிடத்தே முகிழ்த் துயர்ந்த அவளது இள முலைகள் முத்தாரத்தோடே தனது மார்பிடத்தே புக்கு மறையும்படியாகவும் சிவந்த சந்தனஞ் சிதையும்படியும் அணிகலன்கள் வடுப்பட அழுந்தா நிற்பவும் தழுவினானாக அத் தழுவுகைக்கு அவ் வாசவதத்தை உடன்படா தவளாய் என்க.
 
(விளக்கம்) 77. செயிர் - குற்றம். சிறக்குவதாயின் - மிகுமாயின்.   உயிர் இடையிட்ட உறுகண் - சாதற்றுன்பம் 80. அசைந்த - மெலிந்த.  மாதரை ; அவ் வாசவதத்தையை. 81. அரற்றிசை ; வினைத்தொகை.   அணிமுழவு - அழகிய மத்தள இசையாக என்க. 82. கருவிரல் மந்தி - கரிய விரலையுடைய பெண் குரங்கு. கடுவன் - ஆண் குரங்கு.
    84. துகிலை இணைத்தியற்றப்பட்ட பொலிவுற்ற அணையையுடைய பகற் பள்ளியுள் என்க. பகற்பள்ளி - பகற் பொழுதிலே படுக்கும் பள்ளி.
    85. முழீஇ - முழுவி ; மறைய என்க. 86. அகலம் - மார்பு.
    87. புல்லினானாக அப்புல்லுவயின் வாராள் என விரித்து ஓதுக.